சென்னை டிடிகே. சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! – www.patrikai.com – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை:  சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சில  இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில், டிடிகே சாலையில் உள்ள கே.பி.தாசன் சந்திப்பில் மழை நீர் கால்வாய் பணி நடைபெறுவதால்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, டிடிகே சாலையில் உள்ள கே.பி.தாசன் சந்திப்பில் இன்று முதல் வாகனங்கள்  மாற்று பாதையில் திருப்பி விடப்படுகின்றன. இதன்படி அண்ணாசாலையில் இருந்து எஸ்ஐஇடி வழியாக வரும் பேருந்துகள், மற்றும் கனரக வாகனங்கள் திருவள்ளுவர் சாலை கே.பி தாசன் சந்திப்பில் இடது புறம் திரும்பி திருவள்ளுவர் சாலையில் சென்று எல்டாம்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பு , மயிலாப்பூர் வழியாக இலக்கை அடையலாம் .

இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் கே.பி.தாசன், சீத்தம்மாள் காலனி 1வது தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி சீத்தம்மாள் காலனி பிரதான சாலையில் வலது புறம் திரும்பி டிடிகே சாலை சென்று அடையலாம்.

மறுமார்க்கத்தில் ஆழ்வார்ப்பேட்டை பாலத்தில் இருந்து இறங்கி நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சென்று காளியப்பா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அபிராமபுரம் 2வது பிரதான சாலை வழியாக கிண்டி, நந்தனம் வழியாக இலக்கை சென்று அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://patrikai.com/chennai-ttk-road-traffic-change-from-today/