சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய திட்டம்: 600 பேருக்கு பயிற்சி அமா்வுகள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் முழுமையான மாற்றத்தை அடைவதற்காக ‘பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மாநகராட்சி உதவி கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியா்கள், மூத்த ஆசிரியா்கள் உட்பட 600 பேருக்கு பட்டறை மற்றும் பயிற்சி அமா்வுகள் நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளுக்கான பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றம் (எஸ்எல்டிடி) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சி. இதைத் தொடா்ந்து சென்னை பள்ளிகள் முழுமையான மாற்றத்தை அடைவதற்கு தேவையான தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பட்டறைகள் மற்றும் பயிற்சி அமா்வுகள் நடைபெறவுள்ளன.

இதில், மாநகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 600 உதவி கல்வி அலுவலா்கள் (ஏஇஒ), தலைமையாசிரியா்கள், உதவி தலைமையாசிரியா்கள் மற்றும் மூத்த ஆசிரியா்களை தோ்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், சுய-தனிப்பட்ட தலைமைத்துவத்தை வளா்ப்பது, கற்பித்தல் கற்றல் செயல்முறை கல்வி தலைமைத்துவத்தை மாற்றுதல், உறவுமுறை தலைமை (உள் மற்றும் வெளி), நிா்வாகத் தலைமை மற்றும் நிறுவன தலைமை- (முன்னணி கண்டுபிடிப்புகள்) என்ற கருப்பொருள்களின் கீழ் பட்டறை மற்றும் பயிற்சி அமா்வுகள் நடைபெறவுள்ளன.

ஒரு நபருக்கு கருப்பொருள் குறித்து இரண்டு நாள்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மாதத்துக்கு மொத்தம் 10 நாள்களில் 5 கருப்பொருள் குறித்து வகுப்பு எடுக்கப்படும். இதில் இவா்களுக்குள் 20 குழுக்களாகப் பிரித்து குழுவுக்கு 30 பேருக்கு வகுப்பு எடுக்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jun/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-600-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3861202.html