சென்னை சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க கிணறுகளை தூர்வார நடவடிக்கை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழையின்போது தண்ணீர் தேங்கினால், அதை வெளியேற்ற அருகில் உள்ள கிணறுகளை தூர்வாரும் பணியை மாநகராட்சி தொடங்கவுள்ளது.

சென்னையில் மழைக் காலத்தில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுவது தொடர்கதையாகி வருகிறது. துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகளில் பல நாட்களின் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. இதனால் பல நாட்கள் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, கடந்த நவம்பவர் மாதம் பெய்த மழை காரணமாக சென்னையில் முதல் முறையாக 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு இதுபோன்ற நிலையைத் தவிர்க்க சுரங்கப்பாதைகளுக்கு அருகில் உள்ள கிணறுகளை தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. இதன்படி 7 சுரங்கப்பாதைகளில் இந்தப் பணிகள் தொடங்கவுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய சுரங்கப்பாதைகளுக்கு அருகில் வெல் என்று அழைக்கப்படும் கிணறுகள் இருக்கும். மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு இந்த கிணறுகளுக்குள் விடப்படும். மழைநீர் நின்ற பிறகு கிணறுகளுக்குள் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு மழைநீர் வடிகாலில் விடப்படும்.

இந்நிலையில், இந்த கிணறுகளை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதன்படி ஆலந்தூர் சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ரூ.13 லட்சம் செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/813341-chennai-corporation-desilting-wells.html