சென்னை மக்களே.. விழித்துக் கொள்ளுங்கள்.. நிலைமை சரியில்லை – தினமணி

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் சுமார் 90 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதையே ஒரு அபாய ஒலியாக எடுத்துக் கொண்டு எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

தஞ்சாவூரைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் எந்தவிதமான இணைநோயுமின்றி திடீரென கரோனாவுக்கு பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இது பொது மக்களை மட்டுமல்லாது மருத்துவத் துறையினரையே அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒமைக்ரான் மற்றும் அதன் உருமாற்ற வகைகளான பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மிகள் இதுவரை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் ஊடுருவி கரோனா மூன்றாம் அலையாக தீவிரமடைந்தபோதுகூட உயிரிழப்பு விகிதம் அச்சப்படும் வகையில் இல்லை. இந்த நிலையில், வீரியம் குறைந்த அந்த தீநுண்மியால் தற்போது இணைநோய்கள் ஏதுமில்லாத இளம்பெண் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிலும், அவரது உயிரிழப்புக்கான காரணத்தை அறுதியிட்டுக் கூற இயலாத நிலை இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையே அதிகாரப்பூா்வமாக தெரிவித்திருப்பது மக்கள் மறந்திருந்த கரோனா மீதான பயத்தை மீண்டும் துளிா்விடச் செய்துள்ளது.

அது மட்டுமல்ல.. தமிழகத்திலேயே சென்னை மற்றும் செங்கல்பட்டில் முறையே 8.4 மற்றும் 9.1 என்ற அளவில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதற்கடுத்த இடத்தில் கோவை உள்ளது. இங்கு 3.7 சதவீதமாக இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கடைசியாக கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்தாா். அதன்பின்னா், தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இத்தகைய சூழலில், புதிய வகை தீநுண்மியால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், குடும்பங்களில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது.

இருந்தபோதிலும், அதனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பதும், மிதமான பாதிப்புகளே ஏற்படுகின்றன என்பதும் ஆறுதலளிக்கும் விஷயமாக இருந்தன. தற்போது அதனை தகா்க்கும் வகையில் கரோனா உயிரிழப்புகள் மீண்டும் பதிவாகத் தொடங்கியுள்ளது.

இது சென்னை நிலவரம்..

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7,54,046 ஆக உள்ளது. 9 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தற்போது 1000 எட்டவிருக்கிறது.

எப்படி சென்னையில் கரோனா பாதிப்பானது கடந்த சில நாள்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.

15 ஜூன் : 221
14 ஜூன் : 171
13 ஜூன் : 127
12 ஜூன் : 124
11 ஜூன் : 111
10 ஜூன் : 129
09 ஜூன் : 94
08 ஜூன் : 95
07 ஜூன் : 82
06 ஜூன் : 48
05 ஜூன் : 43
04 ஜூன் : 61
03 ஜூன் : 81
02 ஜூன் : 58
01 ஜூன் : 59

சென்னை அப்படி இருக்க.. தமிழகத்தின் நிலையும் மோசமாகவே உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி புதன்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1,938- ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை தகவல்படி 169 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 18,481-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,026-ஆக உள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jun/16/people-of-chennai-stay-awake-the-situation-is-not-right-3863148.html