சென்னை வந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து நேற்று முன்தினம் இரவில் சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது.

இந்த பஸ்சை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோமநாதபுரத்தை சேர்ந்த முருகன் மகன் பாண்டி முனியாண்டி (வயது 32) என்பவர் ஓட்டினார். இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

நள்ளிரவில் பஸ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசங்குளம் பகுதியில் நாற்கர சாலையில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு, மறுபுறம் உள்ள சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

3 பேர் பலி

இந்த விபத்தில் நாகர்கோவில் கீழமண்ணைவிளையைச் சேர்ந்த குமரேசன் மகன் சிவராமன் (33), திருவட்டாறு புத்தக்கடையை சேர்ந்த ஜீசஸ்ராஜன் (50), பஸ் டிரைவர் பாண்டி முனியாண்டி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாலூர் கிராமத்தைச் சேர்ந்த யுகந்தி (30), சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விநாயகா (30) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

புதுமாப்பிள்ளை

விபத்தில் இறந்த சிவராமன் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சிவராமன் தனது மனைவியுடன் வைகாசி விசாகத்திற்காக உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் சென்னைக்கு திரும்பினர். அப்போது ஏற்பட்ட விபத்தில் சிவராமன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/omni-bus-overturns-in-chennai-killing-3-723712