சென்னை கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை | Action to remove Water hyacinths in canals in chennai – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அடையாறு ஆறு, வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்வாய் மற்றும் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் அகற்றப்படும்.

இந்நிலையில், அடுத்த 15 நாட்களில் அடையாறு ஆறு மற்றும் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீர்வழிக் கால்வாய்களில் கடந்த 15 நாட்களில் 4 ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்களை பயன்படுத்தி கொடுங்கையூர் கால்வாய் (வடக்கு), விருகம்பாக்கம் கால்வாய், வடக்கு அவென்யூ கால்வாய், பாடிக்குப்பம் கால்வாய், எம்.ஜி.ஆர். கால்வாய், மாம்பலம் கால்வாய், புலியூர் கால்வாய், ஏகாங்கிபுரம் கால்வாய் மற்றும் ஓட்டேரி கால்வாய் ஆகியவற்றிலும், 3 மினி ஆம்பிபியன் இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணூர் குளம், தரமணி ஏரி, கொடுங்கையூர் இணைப்பு கால்வாய் மற்றும் கூவம் ஆறு ஆகியவற்றிலும், 2 நவீன ஆம்பிபியன் இயந்திரங்களை பயன்படுத்தி அடையாறு ஆறு, கூவம் ஆறு மற்றும் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் 9,113 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நீர்வழித்தடங்கள் சுத்தம் செய்யப்பட்டு 430.61 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

அடுத்த 15 நாட்களில் 4 ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்களை பயன்படுத்தி கொடுங்கையூர் கால்வாய் (தெற்கு), டி.வி.எஸ். கால்வாய், கிண்டி தொழிற்பேட்டை கால்வாய் மற்றும் ஏகாங்கிபுரம் கால்வாய் ஆகியவற்றிலும், 3 மினி ஆம்பிபியன் இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணூர் குளம், வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய், தரமணி ஏரி, கொடுங்கையூர் இணைப்பு கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகியவற்றிலும், 2 நவீன ஆம்பிபியன் இயந்திரங்களை பயன்படுத்தி அடையாறு ஆறு மற்றும் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/814710-action-to-remove-water-hyacinths-in-canals-in-chennai.html