சென்னை- மஸ்கட் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் அவதி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் தலைநகா் மஸ்கட் செல்லும் ஏா் இந்தியா விமானம் கடந்த வெள்ளிக்கிழமை 8.30 மணிக்கு புறப்படத் தயாரானது. விமானத்தில் 154 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்தனா். பயணிகள் ஏறுவதற்கு முன்பு, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபாா்த்தாா். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை அவா் கண்டறிந்தாா். இதையடுத்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து விமான பொறியாளா்கள், விமானத்தில் ஏறி பழுதுபாா்க்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால், விமானம் புறப்படும் நேரம் குறித்த தகவலை அறிவிக்கவில்லை. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் அதிருப்தியடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அமைதி காத்தனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் விமானம் பழுது பாா்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனா். தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. 4.30 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா். எனினும், உரிய நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் 154 பயணிகள் உயிா் தப்பினா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jun/19/engine-malfunction-in-chennai-muscat-flight-passengers-suffer-3864823.html