சென்னையில் கொடிக்கட்டி பறக்கும் ஹவாலா பிசினஸ்.. அடுத்தடுத்து சிக்கும் கோடிக்கணக்கான பணம்.. – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் கடத்தல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தங்கம் மற்றும் தங்க நகைகள் காவல் துறைக்கு தெரியாமல் விற்கப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் சட்டத்துக்கு புறம்பான தங்க நகை பிசினஸ் இங்கு அதிக அளவில் நடந்து வருகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி சென்னை சவுகார்பேட்டையில் முறைகேடாக பிசினஸ் செய்து வரும் பல தங்க விற்பனையாளர்களிடம் தங்கம் வாங்கி செல்லப்படுகிறது.
சமீபகாலமாக குறைந்திருந்த ஹவாலா பணப்பரிவர்த்தனை தற்போது சென்னையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றுள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 2 கோடி அளவில் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் : 1 (( நேற்று ))

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க  போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் நேற்று மதியம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை மடக்கி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரின் பின்புறம் கட்டுக் கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட  நபர்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட தொகை சுமார் 2 கோடி ரூபாய் என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை விசாரணையில் தெரியவந்தது.

மேலும், பிடிப்பட்ட இருவரும் ஆந்திர மாநிலத்தில் மொத்த நகை வியாபாரம் செய்து வருவதாகவும், சவுகார்பேட்டையில் நகை வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணமும், பிடிபட்ட இரு நபர்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம்  2 : (இன்று)

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நடைமேடை 4-க்கு வந்தபோது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திரா ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா என்பவரின் பையை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் சுமார் ரூ. 61 லட்சம் இருந்தது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு வந்த ரூ.61 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பிடிபட்ட சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில்,  நகை வாங்குவதற்கு பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சாய் கிருஷ்ணா மற்றும் அவர் கொண்டு வந்த ரூ.61 லட்சம் பணத்தை ஒப்படைத்தனர்.

சம்பவம் 3 : (21-06-2022)

இதே போன்று கடந்த 21 ம் தேதி ஷாலிமரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த  பயணியிடம், 78 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர்.
விஜயவாடாவை சேர்ந்த வெங்கட சதீஷ் என்பவரின் உடமையை சோதனை செய்த போது, எந்தவித ஆவணம் இன்றி வைக்கப்பட்டிருந்த பணத்தை,  ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறை ஆதிகாரிகளின் விசாரணையில், சென்னைக்கு தங்கம் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக,  விஜயவாடாவை சேர்ந்த வெங்கட சதீஷ் கூறியுள்ளார்.

சம்பவம் 4 : (16-06-2022)

கடந்த 16 ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ 46 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த பினாகினி விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அதில் வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்த ரவி(56) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால் அவரை சோதனை செய்தனர். சோதனையில் அவரது கைப்பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.46 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து பணத்தையும், கொண்டு வந்த ரவியையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் 5 : (28.05.22)

கடந்த மாதம் 28 ம் தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த யுகேந்தர் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.51 லட்சம் பணம் கொண்டு வந்தார். ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதக் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை சவுகார்பேட்டையில் தங்கம் வாங்குவதற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 ஹவாலா பணம் பறுமுதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த மூன்று சம்வங்களில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/hawala-business-peak-in-chennai-millions-of-money-stuck-ekr-anb-762970.html