வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகளை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 23ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்,  சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில்,  சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் கண்காணிக்கவும், திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதை உறுதி செய்யவும் கீழ்க்கண்ட 15 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் மற்றும் இதர திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றுவதை ஒருங்கிணைத்து பணிகளை கண்காணிக்க உள்ளனர்.

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளும் விதமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்தல், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்களைக் கண்டறிதல், மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளை மாநகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் பணிகளை தொடங்கி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியும், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள், இதரத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=779233