சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்தி, அதன் கொள்ளளவை அதிகரிக்க, நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது… இது சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பூண்டி ஏரி அல்லது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சென்னை நகர மக்களின், குடிநீர்த் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 1944ம் ஆண்டில், 65 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் திறக்கப்பட்டது.
இந்த நீர்த்தேக்கம் சென்னையிலிருந்து, 60 கிமீ., தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
மழைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள இப்படியா! நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! மக்கள் ஒரே குஷி
பூண்டி நீர்த்தேக்கம்
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இது விளங்கி கொண்டிருக்கிறது.. இங்கு சேமித்து வைக்கப்படும் நீரானது, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.. சில நேரங்களில் பருவமழை அதிகமாக பெய்துவிட்டால், நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்தும் அதிகரித்துவிடும்.. அதனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது..
தண்ணீர் பற்றாக்குறை
ஆனால், பருவமழை தவறிவிட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உள்ளது.. அதனால்தான், உபரிநீரை சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி வரும் நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்துவதன் வாயிலாக, அதன் மொத்த கொள்ளளவை, 3.2 டிஎம்சியிலிருந்து, 5 டிஎம்சியாக உயர்த்த முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்…
அதிரடி ஆய்வு
இதன்காரணமாக, மழைக்காலங்களில் அதிக அளவு நீர் தேக்கப்படுவதுடன், உபரிநீர் வீணாவதும் தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் வாயிலாக, வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை குறைத்து, அதிக அளவு நீரை சேமித்து வைக்க முடியும் என்றும் உறுதி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அதிகாரிகள் குழுவினர் நீர்த்தேக்கத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்..
ஒப்புதல்
இதற்காக, மண் தரம் மற்றும் தரை கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பூண்டி நீர்த்தேக்கத்தை நேரில் விரைந்தனர்.. இது குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சாத்தியக்கூறுகள் பற்றிய விரிவான கலந்தாலோசனை நடத்தி, அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்தும் பணிகள் துவங்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
மகிழ்ச்சி – நம்பிக்கை
ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் சொல்லும்போது, “மழைக்காலங்களில் வீணாக வெளியேற்றப்படும் உபரிநீரை தேக்கி வைக்க, 2 அடி ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறோம்.. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டால், பூண்டி நீர்த்தேக்கத்தை 2 அடி ஆழப்படுத்தும் பணி உடனடியாக துவங்கும்… இதனால், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 5 டிஎம்சியாக உயரும். அதிக அளவு நீர் சேமிக்கப்படும்” என்றனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/happy-news-for-chennai-and-poondi-sathyamoorthy-reservoir-survived-by-official-team-464904.html