முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்திருக்கும் உத்தரவில், திரையரங்குகள், துணிக்கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கு வரும் பொதுமக்களும், கடை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இதையும் படிக்க.. என்ன படிக்கலாம்? இளநிலை உளவியல் படிப்புகளுக்கு கூடும் வரவேற்பு

வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு வரும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தெரிவக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிா்வாகம் இறங்கியுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் முன்னெடுத்து வருகிறது.

கரோனா இரண்டாம் அலையின்போது, நாளொன்றுக்கு அதிகபட்சமாக சுமாா் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடா்ந்து வந்த நாளில் கரோனா பாதிப்பு குறைந்தது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் 19 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்த நாள்களில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் 5,603 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா், அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-க்கும் மேல் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னையில் 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகள், கல்லூரிகளில் தொற்று பரவலைத் தடுக்க மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jul/04/face-mask-is-mandatory-3874000.html