சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்! – தினமணி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு புதன்கிழமை முதல் அபராதம் விதிக்கப்பட்டும் வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் இன்று வியாழக்கிழமை முதல் முகக்கவசம் கட்டாயம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, இதைக் கட்டுப்படுத்தும் வகையில் சந்தைப் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து,ரயில் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிநபா் இடைவெளியைக் ககடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசும், சென்னை மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு முறைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-இன்படி, முகக்கவசம் அணியாதவா்களுக்கு புதன்கிழமை முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வருக்கு இன்று திருமணம்

இதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முகக்கவசம் அணியாத 121 பேரிடம் இருந்து ரூ.60,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்று வியாழக்கிழமை(ஜூலை 7) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jul/07/face-mask-mandatory-in-chennai-metro-train-from-today-3875926.html