சென்னை: முகக்கவசம் அணியாதோரிடம் ஒரே நாளில் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவர்கள், சென்னையில் பொது இடங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், திடீர் சோதனை நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி நேற்று (ஜூலை 6) முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூலை 7 ) 233 நபர்களிடம் இருந்து ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருப்பதால், மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

கரோனா நிலவரம்:

தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,563, பெண்கள் 1,202 என மொத்தம் 2,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1011 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 93,599 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 37,193 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,103 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,378 ஆக உள்ளது.

உயிரிழந்தவர் விபரம்: திருவாரூரைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவருக்கு கடந்த 24-ம் தேதி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 25-ம் தேதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு, உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. இந்நிலையில், கரோனா தொற்று, நுரையீரல் பிரச்னை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,743 ஆகவும், சென்னையில் 1062 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்றும், நேற்று முன் தினமும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/823313-1-lakh-fine-collected-from-non-mask-wearers-in-chennai-tamil-nadu.html