கண்காட்சி, நிகழ்ச்சிகள் நடத்தலாம் – பொழுதுபோக்கு இடமாக மாறும் சென்னையின் 100 ஆண்டு பழமையான கட்டிடம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது மண்டபத்தை ஒரு பொழுதுபோக்கு இடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்று விக்டோரியா பொது மண்டபம் என்று அழைக்கப்பட்டு வரும் விக்டோரியா ஹால். இந்த ஹால் 1888-ம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பொன் விழா நினைவாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது.

ஈ.வே.ரா.பெரியார் சாலையில் மூர்மார்கெட் அருகில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகை கட்டிடத்துக்கும் இடையில் இது அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால் இந்தக் கட்டிடம் மோசமான நிலைக்குச் சென்றது.

இந்நிலையில், ரூ.40 கோடி செலவில் இந்தப் பொது மண்டபம் விரைவில் சீரமைக்கப்படவுள்ளது. சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் இதற்கான விரிவான திட்டம் தயார் செய்து வருகிறது. இதன்படி சென்னையின் ஒரு பொழுதுபோக்கு இடமாக இதை மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மூன்றடுக்கு கொண்ட விக்டோரியா பொது மண்டபத்தின் தரைதளமானது 13,342 சதுர அடி பரப்பளவிலும், முதலாவது தளமானது 12,541 சதுர அடியிலும் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளங்களில் இரண்டு பெரிய கூடங்கள் உள்ளது. இதில் தலா 600-க்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். 200 பேர் அமரக் கூடியதாக மரத்தால் அமைக்கப்பட்ட காட்சியகம் அமைந்துள்ளது.

19 மற்றும் 20ம் நூற்றாண்டின் இது ஒரு நாடக அரங்கமாகவும், மாநாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதை சீரமைத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த அரங்கின் கீழ் பகுதியில் ஒரு கண்காட்சி அரங்கம் உள்ளது. இதில் சென்னையின் பராம்பரியம் தொடர்பான கண்காட்சி நிரந்தரமாக இடம் பெறும். இதைத் தவிர்த்து தேவைக்கு ஏற்றது போல் கண்காட்சி அமைக்கும் வகையில் இடம் இருக்கும். 2-வது தளத்தில் ஓர் அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தை ஒரு பல்நோக்கு அரங்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல நிகழ்ச்சி நடத்திக்கொள்ள முடியும்.

மேலும், ஹாலை சுற்றி உணவகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகைக்கு அருகில்தான் சென்னை சதுக்கம் உள்ளது. இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றால், இது சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கு இடமாக மாறும்” என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/825375-chennai-victoria-hall-renovated-to-host-public-meetings.html