50 பூங்காக்கள்… மழைக்கு பலே பிளான்… புதுசா மாறப் போகும் சென்னை! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

தலைநகர் சென்னையில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. இதனை விரைவாக மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மழைநீரை உறிஞ்சும் வகையில் வசதிகள் கொண்ட பூங்காக்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், முதல்கட்டமாக 50 பூங்காக்களில் மழைநீரை உறிஞ்சும் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திலும் இரண்டு பூங்காக்கள் வீதம் அடையாளம் காண அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில் மழை காலங்களின் போது மழைநீரை சேகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி நிலத்தில் சேகரமாகும் முன்பாக இயற்கையான முறையில் வடிகட்டப்பட்டு செல்லும் வகையில் திட்டமிடப்படும். இந்த திட்டம் மண்டல அதிகாரிகள், கட்டிடக்கலை நிபுணர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இறுதி வடிவம் பெற்று செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

தாம்பரம் கிழக்கு பைபாஸ்: இன்னும் 2 வருஷத்தில் மாறப் போகும் சென்னை!

வழக்கமாக கோடைக்காலத்தில் சென்னையில் குடிநீர் பஞ்சம் வரக்கூடும். பருவமழையின் அளவை பொறுத்து அடுத்த சில மாதங்களுக்கான நீர் தேவை பூர்த்தி செய்யப்படும். ஒருவேளை பருவமழை பொய்த்து போனால் தண்ணீர் தட்டுப்பாடு உண்டாகும். இதுபோன்ற சமயங்களில் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர்மட்டம் பயனுள்ள வகையில் இருக்க உதவும்.

அதற்கு சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் உட்பட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவை வெள்ள பாதிப்பு நிறைந்த பகுதிகளில் தடுப்பானாக செயல்பட்டு வெள்ளநீர் வடிகால்களில் செல்லும் நீரை வேகத்தை குறைக்கிறது.

சென்னையில் லேடீஸ் ஸ்பெஷல் பேருந்துகள்… அதுவும் பிங்க் நிறத்தில்…!

அதுமட்டுமின்றி படிப்படியாக வெள்ளநீர் வடிந்து செல்லவும் உதவுகின்றன. தலைநகர் சென்னையில் ”சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் 100 புதிய பூங்காக்கள், 50 புதிய மைதானங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சரியான நிலப் பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக 50 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/new-setup-for-storing-rainwater-with-50-sponge-parks-in-chennai-corporation-soon/articleshow/92850823.cms