சென்னையில் கொள்ளை.. மதுரையில் உல்லாசம்.. அழகிகளுக்காக காத்திருந்தபோது சிக்கிய பலே கொள்ளையன் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை பூக்கடை பகுதி உள்ள துணிக்கடை மற்றும் பேக் கடையில் கடந்த ஒன்றாம் தேதி இரவு மர்ம நபர்கள் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடி உள்ளார்கள் என பூக்கடை காசல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. துணிக்கடையில் ரூபாய் 5 லட்சமும், பேக் கடையில் ரூபாய் 1.5 லட்சமும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கடையின் உரிமையாளர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தனிப்படை போலீசார் குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.போலீசார் துணிக்கடைக்கு சென்று விசாரணை செய்தபோது குற்றவாளி கடையின் முன்பக்கமாக செல்லாமல் பின்பக்கம் இருந்த பைப்பின் மீது ஏறி நான்காவது மாடிக்குச் சென்றுள்ளார்.  அங்கு இருந்த ஆஸ்பெட்டாஸ் கூரையை உடைத்து அதன் வழியாக கடைக்குள் சென்றுள்ளான். பூட்டை வெட்டி ரூபாய் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததும் இதே பாணியில் அருகாமையில் இருந்த பேக் கடையில் ரூபாய் 1.5 லட்சம் கொள்ளை அடித்தது சென்றதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்மநபர் 

இதனையடுத்து சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்த போது மர்ம நபர் ஒருவர் திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குச் சென்றது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் தங்கி இருந்த லாட்ஜில் இருந்து கார் எடுத்துக்கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் லாட்ஜை புக் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அவரது மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் அவர் மதுரை சென்று பதுங்கியது தெரியவந்தது.

சிசிடிவி காட்சியில் சிக்கிய கொள்ளையன்

பின்னர் மதுரை சென்ற போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்நபர் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆனந்த்(34) என்பது தெரியவந்தது. பள்ளிப்படிப்பை சரியாக தாண்டாத இவர் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு வயது முதலே திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஆனந்த் பெருநகரங்களில் உள்ள சில கடைகளை நோட்டமிட்டுள்ளான்.

Also Read: ஆசை வார்த்தை கூறி விவாகரத்து செய்யவைத்து, ஏமாற்றியதால் ஆத்திரம்.. மயக்கமருந்து கொடுத்து குத்திக் கொலை செய்த கள்ளக்காதலி

பொருள்கள் வாங்குவது போல் கடைகளில் நோட்டம்

அந்த கடைக்கு பொருட்கள் வாங்குவது போல எந்தெந்த வழியாக உள்ளே வரலாம் என்று குறித்துவைத்துக்கொண்டு, அதன் பிறகு அந்தந்த கடைகளில் கொள்ளையடித்து வந்ததும், அதே பாணியில் சென்னை பூக்கடையில் உள்ள துணிக்கடை மற்றும் பேக் கடைகளில்  27ஆம் தேதி பொருட்கள் வாங்குவது போல கடைக்குச் சென்று எந்த வழியாக உள்ளே வரலாம் என திட்டம் திட்டி வைத்துக் கொண்டுள்ளார்.

குறிப்பாக பெங்களூரில் இருந்து கடந்த 27 ஆம் தேதி அதிகாலை தனது சொந்த காரில் சென்னை வந்து நேராக திருவல்லிக்கேணி பெரிய தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளான். அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் காரை விட்டுவிட்டு ஆட்டோவில் பூக்கடை பகுதியில் உள்ள தான் முன்பே கொள்ளை அடிக்கத் திட்டமிட்ட கடைக்கு வந்துள்ளான்.
பின்பு கடையின் பின்புறத்தில் உள்ள பைப்பை பிடித்து நான்காவது மாடிக்கு ஏறி அங்கு தான் வைத்திருந்த கட்டிங் பிளேயர், கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்களால் ஹாஸ்பிடாஸ் கூரையை உடைத்து பின்னர் கதவின் பூட்டுகளை வெட்டி உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

கொள்ளையடிக்க பயன்படுத்திய பொருள்கள்

அழகிகளுக்காக காத்திருந்தபோது சிக்கிய கொள்ளையன்

சென்னை பூக்கடையில் கொள்ளை அடித்து விட்டு நேராக மதுரை சென்று அங்கு பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக பெண்களை புக் செய்து அவர்களுக்காக காத்திருந்ததும் அப்படி காத்திருந்தபோது போலீசார் சென்று அவரை கைது செய்துள்ளனர். மேலும், மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி பகுதியில் உள்ள 5 கடைகளை இவர் கொள்ளையடிக்க திட்டுமிட்டிருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

திருடிய பணத்தில் பெங்களூரில் முதலீடு

ஆனந்த் கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு அந்த பணத்தில் பெங்களூரில் ஒரு வெல்டிங் கடை திறந்துள்ளார். மேலும், தற்போது பெங்களூரில் புதிதாக மளிகை கடை ஒன்றையும் திறந்துள்ளார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரில் கள்ளக்காதல் பிரச்சனை தொடர்பாக ஒரு நபரை கொலை செய்து பெங்களூர் மைக்ரோ சிட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அதேபோன்று 2013 ஆம் ஆண்டு வேலூரில் உள்ள நகை கடையில் மூன்று கிலோ தங்கம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

குறிப்பாக இவர் மீது பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலங்கள் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதும் பெரிய வந்தது. ஆரம்பகாலங்களில் கூட்டணி சேர்த்து கொள்ளையடித்து வந்த ஆனந்த் தற்போது தனியாகவே சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். கர்நாடக மாநிலம் சிவாஜி நகரில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பூட்டி இருந்த வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த வழக்கு தொடர்பாக சிவாஜி நகர் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்ததும், நான்கு மாதத்திற்கு முன் இவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

பணக்காரன் ஆவதே லட்சியம்

படிப்பறிவு இல்லாத ஆனந்த் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் ஆரம்ப காலங்களில் சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பின் சத்தம் வராமல் பூட்டு மற்றும் இரும்பு கம்பிகளை உடைப்பதை யூட்யூபில் பார்த்து பின் அதேபோன்று நவீன கருவிகளை வாங்கி தனது கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.கைது செய்யப்பட்ட ஆனந்திடமிருந்து ரூபாய் 4 லட்சம் பணம் அவருடைய சைலோ கார் கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தி வந்த நவீன சுத்தியல், இரும்பு வெட்டும் கருவி, முகமூடிகள், கையுறைகள், கத்தி, சிறிய கடப்பாரை போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(Chennai)

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/robber-arrested-in-madurai-for-breaking-roofs-and-looting-money-in-chennai-771666.html