சூப்பர்! நியூயார்க் ஸ்டைலில் மாறும் சென்னை! வருகிறது மெகா ஸ்ட்ரீட்ஸ் திட்டம்.. லுக்கே மாற போகிறது! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு ஏற்ப நகரத்தின் உட்கட்டமைப்புகளை அரசு அவ்வப்போது சீரமைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாநகரின் 5 பிரதான பகுதிகளில் தி.நகரில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்று பெரிய தெருக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை இந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்று. வேறெங்கும் இல்லாத அளவில் இது தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படியான நகரத்தில் வேலை, வாழ்வாதாரத்தை தேடி அவ்வப்போது மக்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் இந்நகரத்தின் மக்கள் தொகை 1.1 கோடி. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதற்கேற்றாற்போல் நகரத்தை கட்டமைப்பது, சீரமைப்பது அவசியமானதாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த பெரு நகரத்தின் முக்கியமான 5 பகுதிகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த பகுதியில் உள்ள தெருக்களை தி.நகரில் உள்ள பெரிய தெருக்களை போன்று மாற்றியமைக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்த மத்திய அரசு!முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்த மத்திய அரசு!

ரூ.100 கோடியில் ‘மெகா ஸ்ட்ரீட்ஸ்’

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முதலில் தி.நகர் பகுதியில்தான் அமலாக்கப்பட்டது. இந்த பகுதியில் பாதசாரிகள் நடப்பதற்கென்று சாலைகள் விரிவான தெருக்களாக மாற்றியமைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இந்த பாதையில் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் கடந்த பருவமழையின்போது இந்த பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் போல் அல்லாமல் ‘மெகா ஸ்ட்ரீட்ஸ்’ திட்டமாக சென்னையின் 5 பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதற்கு ரூ.100 கோடி வரை ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

எந்தெந்த பகுதிகள்?

இத்திட்டதின்படி சென்னை மாநகராட்சியின் முதல் மண்டலமான திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் அருணாச்சலம் லூப் சாலை, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை, வண்ணாரப்பேட்டையின் எம்.சி ரோடு, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை, வேளச்சேரியில் MRTS நிலையம் அருகில் உள்ள சாலை ஆகியவை நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பது போல பெரிய தெருக்களாக மக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளாக விரிவாக்கம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும்.

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை

சென்னையின் மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இதுவும் ஒன்று. நகரத்தின் மைய பகுதியில் இருப்பதால் இது தி.நகர், அண்ணா சாலை, 100 அடி ரோடு, ஆகியவற்றை இணைக்கிறது. மட்டுமல்லாது முக்கியமான கல்லூரிகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் ‘மெகா ஸ்ட்ரீட்ஸ்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான டெண்டர்கள் முதலில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை

இந்த பகுதியில் ‘மெகா ஸ்ட்ரீட்ஸ்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஸ் கோர்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டத்திற்கான மல்டி மாடல் ஒருங்கிணைப்புக்கான வரைபடங்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். இதன் மூலம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்படும்.

வண்ணாரப்பேட்டை

இந்த பகுதியில் அமைந்துள்ள எம்.சி சாலை இந்த திட்டம் மூலமாக விரிவாக்கப்படும். ஏற்கெனவே இங்கு ரூ.21.6 கோடி மதிப்பில் வணிக வாளகம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை மாநகராட்சியிடம் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். அதேபோல ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் மற்றொரு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரி

திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் அருணாச்சலம் லூப் சாலையில் வணிக வளாகத்திற்கான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. அதேபோல வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையத்தை வேளச்சேரி மெயின் ரோட்டுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் திட்ட அறிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையிலான குழுவால் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் மாநில அரசின் நிதி கிடைக்கப்பெற்ற உடன் பணிகள் தொடங்கப்படும்.

English summary
It has been reported that there are plans to build Mega Streets in 5 main areas of the city like the one in T-Nagar

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-going-to-the-next-level-5-places-choosed-for-mega-street-project-466436.html