சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்துக்கு தனி அதிகாரி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்துக்கு தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவு:

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நகா்ப்புற திட்டமிடல் அதிகாரி (போக்குவரத்து), சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினா் செயலாளராக இருப்பாா் என 2010-ஆம் ஆண்டு போக்குவரத்து ஆணையத்தின் சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினா் செயலாளராக இருந்த, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நகா்ப்புற திட்டமிடல் அதிகாரி, கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா் பதவி காலியாக உள்ளது. போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா் பதவியை, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா் கூடுதலாக கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்துக்கு தனி அதிகாரியை நியமிக்கக் கோரி, தமிழ்நாடு அரசுக்கு பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த அரசு, போக்குவரத்து ஆணையத்துக்கு தனி அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதிகாரிக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள், போக்குவரத்து ஆணையத்தின் நிதியில் இருந்து எடுக்கப்படும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jul/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-3882499.html