ரூட்டை மாத்திய சென்னை மக்கள்… ஆனா இப்படியொரு பெரிய சிக்கல்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
தலைநகர் சென்னையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிநபர் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தினர். குறிப்பாக இருசக்கர வாகன விற்பனையும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்தது. தற்போது கொரோனா மீதான அச்சம் குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2019ஆம் ஆண்டை காட்டிலும் தற்போது 30 ரூபாய் அதிக விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் தங்களின் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் போட்டு, மீண்டும் பொதுப் போக்குவரத்தை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியிருக்கின்றனர். புதிய இருசக்கர வாகனப் பதிவு குறித்து கிடைத்துள்ள தகவலில்,

மாதம் 2019 (கொரோனாவிற்கு முன்) 2022
ஏப்ரல் 1,31,294 1,06,646
மே 1,31,033 1,02,564
ஜூன் 1,24,417 1,10,744

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, MTC பேருந்துகளில் தினசரி 29 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புறநகர் ரயில்களில் 30 சதவீதமும், மெட்ரோ ரயிலில் 50 சதவீதமும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
T Nagar Skywalk: இன்னும் ஒரே மாசம் தான்- சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்!
அதேசமயம் சென்னை மாநகரின் தேவையை போக்குவரத்து கழகம் பூர்த்தி செய்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 60 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால் சென்னைக்கு 5,400 பேருந்துகள் தேவைப்படுகின்றன.

2019 2022 வேறுபாடு
மொத்த பேருந்துகள் 3,476 3,454 -22
இயக்கப்படும் பேருந்துகள் 2,691 2,606 -85
வருமானம் (கோடியில்) 2.46 1.45 -1.01
ஒரு கிலோமீட்டருக்கு வருமானம் 32.71 22.1 -10.61
பயணிகள்/ பேருந்து/ ஒரு நாளில் 713 855 141

தற்போது பயன்பாட்டில் இருப்பவை 3,400 பேருந்துகள் மட்டுமே. எனவே கூடுதலாக 2,000 பேருந்துகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில் சென்னை மாநகராட்சி 4,337 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பெண்களுக்கான இலவச பயணத் திட்டமும் ஒரு காரணமாகும்.

அண்ணா சாலை மெட்ரோ; சென்னை மக்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தகவல்!

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாநகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால் இது அரசின் கொள்கை முடிவு என்பதால், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் அரசு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதேசமயம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-people-move-from-own-vehicles-to-public-transport-like-bus-and-metro/articleshow/92992171.cms