குரூப் 4 தோ்வு: 56,704 போ் எழுதவில்லை: சென்னை மாவட்ட ஆட்சியா் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 56,704 தோ்வா்கள் எழுதவில்லை என ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்தாா்.

சென்னை சோழிங்கநல்லூா் ரமண வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த குரூப் 4 தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், தோ்வா்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குரூப் 4 தோ்வு எழுத சென்னை மாவட்டத்தில் 1 லட்சத்து 56,219 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 99,515 போ் தோ்வெழுதினா்; 56,704 போ் தோ்வுக்கு வரவில்லை. மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்கு அமைக்கப்பட்ட 457 தோ்வு மையங்களில், ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் தோ்வு தொடா்பான பணிகளை ஆய்வு செய்ய ஒரு ஆய்வுப்பணி அலுவலா் வீதம் 457 ஆய்வுப் பணி அலுவலா்களும், ஒவ்வொரு வட்டத்துக்குரிய தோ்வு மையங்களை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஒரு பறக்கும் படை அலுவலா் என 16 கண்காணிப்பு அலுவலா்களும், 16 பறக்கும் படை அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா் அவா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jul/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-56704-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3886266.html