தொடர் நஷ்டம்! கைமாறும் ’அம்மா உணவகங்கள்’.? தீவிர ஆலோசனையில் சென்னை மாநகராட்சி! என்ன காரணம் தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதனால் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கூலித் தொழிலாளிகள் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாறும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது

இதையடுத்து மாநகராட்சி பகுதிகளிலும், அடுத்த கட்டமாக நகராட்சி என தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் ., சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் , சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்டவை மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உணவருந்தினர்.

4 மாதமாகவே இப்படித்தான் நடக்கிறது! நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய மருது அழகுராஜ் பேட்டி4 மாதமாகவே இப்படித்தான் நடக்கிறது! நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய மருது அழகுராஜ் பேட்டி

திமுக ஆட்சி

கடந்த வருடம் திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஏழை எளியோரின் பசியை போக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக அதிமுகவினர் புகார் கூறிய நிலையில், அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலினால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி

அதே நேரத்தில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் கிடக்கிறது எனவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரது ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அம்மா உணவகங்கள்

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குறிப்பாக அம்மா உணவகத்தை மூட முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் இருக்கும் 200 வார்டுகளை தலா இரண்டு என்ற எண்ணிக்கையில் தற்போது அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 5 அம்மா உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.

மாற்றம்

தற்போது 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் என வருடத்திற்கு 20 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. ஆனால் செலவு 140 கோடி ஆகிறது எனவும், இதனால் மாநகராட்சிக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மா உணவக அறக்கட்டளை

அதன்படி அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் எனவும் அதன் மூலம் அம்மா உணவக அறக்கட்டளை அமைத்து அம்மா உணவகங்களை நடத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கின் போது சுமார் 468 கோடி ரூபாய்க்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவளித்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மலிவு விலை விற்பனை ஆனாலும் நஷ்டம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் அறக்கட்டளை என்பது அம்மா உணவகங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி எனவும் இதன் காரணமாக அம்மா உணவகத்தில் உண்மையான நோக்கத்தை சிதைப்பது போல் இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர்.

English summary
120 crore rupees loss to Chennai Corporation every year due to Amma Restaurant which provides affordable food to poor people. As a result, there are reports that a foundation has been started and a consultation is underway to get funds and run the Amma restaurant.

Source: https://tamil.oneindia.com/news/chennai/amma-restaurants-going-to-private-ownership-in-chennai-corporation-468550.html