ஐஐடி மெட்ராஸ் மாணவி பாலியல் வன்கொடுமை; இதுவரை போலீஸ் புகார் இல்லை – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

ஐஐடி எம்-ன் வாயில்கள் போதுமான பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஐடி எம் மாணவர் ஒருவர் தனது தோழி, நள்ளிரவில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அடையாளம் தெரியாத ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்த நிலையில், இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாக நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

புகாரின்படி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், மாணவி வளாகத்தில் உள்ள என்ஏசி அருகே இருந்தபோது, ​​​​இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன் திடீரென மாணவி மீது பாய்ந்தான். இதில் மாணவி கீழே விழ, அவன் அவளை பாலியல் ரீதியாக தாக்கினான். மாணவி கத்தினாலும் உதவிக்கு அங்கு யாருமில்லை. இருப்பினும் மாணவி, அவனுடன் சண்டையிட்டு காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடினாள்.

இதுகுறித்து மாணவி போலீஸ் புகார் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை” என்பதால் ஐஐடி-எம் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஐஐடி’ ஒரு அடையாள அணிவகுப்பை ஏற்பாடு செய்ததாகக் கூறியது, ஆனால் மாணவியால் தன்னைத் தாக்கியவரை அடையாளம் காண முடியவில்லை.

இதுகுறித்து ஐஐடி தரப்பு கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியின் நண்பரால் இன்ஸ்டிடியூட்டில் புகார் செய்யப்பட்டது. நிறுவனம் உடனடியாக விசாரணையைத் தொடங்கியது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மாணவி கூறிய அடையாளங்களுடன் பொருந்திய கிட்டத்தட்ட 300 பேரின் படங்களைப் பகிர்ந்து கொண்டது.

இருப்பினும், அவரால் இன்னும் யாரையும் அடையாளம் காணமுடியவில்லை.

குற்றவாளியை அடையாள கண்டறிய அன்று இரவு பணியில் இருந்த 35 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் மாணவி முன் கொண்டுவரப்பட்டனர். ஆனால் அந்த மாணவியால் மீண்டும் யாரையும் அடையாளம் காண முடியவில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐஐடி எம்-ன் வாயில்கள் போதுமான பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் நண்பர் அமைப்பு உள்ளது, மேலும் தேவைப்படும் நேரத்தில் பாதுகாப்பு ஊழியருடன் பஸ்ஸை அழைக்கும் வசதியும் உள்ளது. போலீசில் புகார் செய்வதில் மாணவி ஆர்வம் காட்டவில்லை. விசாரணை தொடர்கிறது, என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்தபோது மாணவியைக் காப்பாற்ற காவலர்கள் வரவில்லை. “ஒரு நீண்ட பயங்கரமான போராட்டத்திற்குப் பிறகு, அவள் அவனை எதிர்த்துப் போராடி, காயங்களுடன் பதறியடித்து, உடைந்த சைக்கிளுடன் மீண்டும் ஓடினாள். என் தோழி இந்த மோசமான நிகழ்விலிருந்து தப்பிக்க முடிந்தது, இது மிகவும் மோசமாக முடிந்தது என்று நிறுவனத்துக்கு மாணவியின் நண்பர் அளித்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

மாணவர்களின் டீன் நிலேஷ் ஜே வாசா, அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சலில், இரவில் வளாகத்தில் தனியாகப் பயணிக்கும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவும், விரைவான நடவடிக்கைக்காக உடனடியாக பாதுகாப்புப் பிரிவை அணுகவும் அறிவுறுத்தினார். அவசர காலங்களில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பாதுகாப்பிற்குத் தெரிவிக்க உதவும் வகையில் மொபைல் செயலி கொண்டுவர முயற்சிக்கும் பணியில் உள்ளதாக அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/iit-madras-student-sexually-assaulted-by-an-unidentified-man-486693/