கோவா ஓரம் போ! புத்துயிர் பெரும் 8 சென்னை பீச்கள்.. இறக்கப்படும் ரூ.100 கோடி.. சிங்கார சென்னை 2.0! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சமீபத்தில் சென்னை கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாக நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான தொடக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிங்கார சென்னை திட்டதை மேம்படுத்தி சென்னையை புதுப்பொலிவு பெற வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மெரினா முதல் கோவளம் வரை 30 கி.மீ தூரமுள்ள கடற்கரை பகுதியை மறுசீரமைத்து புதுப்பொலிவாக்கும் திட்டத்திற்காக 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சூப்பரா மாறப்போகும் மெரினா-கோவளம் கடற்கரை.. ரூ.100 கோடி ஒதுக்க்கீடு - 17 பேர் குழுவை அமைத்து அரசாணை!சூப்பரா மாறப்போகும் மெரினா-கோவளம் கடற்கரை.. ரூ.100 கோடி ஒதுக்க்கீடு – 17 பேர் குழுவை அமைத்து அரசாணை!

மெரினா

மெரினா முதல் பெசன்ட் நகர், எலியட்ஸ் முதல் நீலாங்கரை, நீலாங்கரை முதல் அக்கரை, அக்கரை முதல் கானத்தூர் மற்றும் கானத்தூர் முதல் கோவளம் வரை என கடற்பகுதிகளை புத்துயிர் பெற வைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதன்படி இந்த கடற்கரையில் நடைபாதைகளை அமைப்பது, மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு சென்று பார்ப்பதற்கு வழியை ஏற்படுத்துவது, ஆலிவர் ரிட்லி ஆமைகள் இனப்பெருக்கம் செய்ய போதிய வசதிகளை ஏற்படுத்து போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் தற்போது பெசன்ட் நகர் கடற்கரையிலிருந்து துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு குறித்து கடந்த சனிக்கிழமை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

தொடக்கம் மட்டுமே

கடலோர மண்டலங்களான தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள 16 வார்டுகளின் கவுன்சிலர்கள் இந்த திட்டம் குறித்து குடியிருப்போர் சங்கங்களுடன் பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பு இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தி முடிக்க உதவும் நிலையில் கலந்தாலோசனை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா பேசுகையில், “இந்த கடற்கரை புத்துயிர் திட்டம் வெறும் தொடக்கம் மட்டுமே. இதில் மேலும் சில அம்சங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

இணைப்பு

இந்த திட்டம் மெரினா முதல் கோவளம் வரையிலான 31.6 கிமீ கடற்கரைக்கு புத்துயிர் அளிப்பதுடன் துண்டு துண்டான பகுதிகளை இணைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும், “மெரினா கடற்கரை, உடைந்த பாலம், எலியட்ஸ், திருவான்மியூர், நீலாங்கரை, அக்கரை மற்றும் உத்தண்டி, முட்டுக்காடு மற்றும் கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் கடற்கரையை புத்துயிர் பெற வைப்பதையும் கடந்து, உப்பு சதுப்புநிலங்கள், சதுப்புநிலக் காடுகள் போன்ற சூழலியல் அம்சங்களை மீட்டுருவாக்கம் செய்வதையும் கணக்கில் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சர்வதேச தரம்

இதன் முக்கிய அம்சமாக உள்ளது என்பது நடை பாதைகள்தான். அதாவது கடலையொட்டி அமைக்கப்பட உள்ள ஒரு அகலமான நடைபாதை. இது இயற்கையாக உள்ள வகையில் அமைக்கப்படும். சர்வதேச நாடுகளில் கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதைப்போல மெரினா கடற்கரையில் பூங்காக்கள், சைக்கிள் செல்வதற்கான வழித்தடங்கள் ஆகியவையுடன் அடிப்படை வசதிகளையும் கடலோர ஒழுங்குமுறை மண்டல வழிகாட்டுதல்களின் கீழ் அமைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அறிவிப்பு

கடல் அரிப்பு, ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்கம் என பல அம்சங்களை கணக்கில் கொண்டு ஆரோக்கியமான கடற்கரைகளை உருவாக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வீட்டு வசதித்துறை மீதான மானிய கோரிக்கையின்போது, மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை பகுதி ரூ.100 கோடியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மறுசீரமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Recently, information has come out that the work has been started while funds have been allocated and projects have been announced for the cleaning of the Chennai beach.

Source: https://tamil.oneindia.com/news/chennai/eight-chennai-beaches-to-be-revitalized-at-rs100-crore-officials-who-started-the-work-468915.html