சென்னையில் ஷாக்.. வெடித்து சிதறிய ஏசி.. தூக்கத்திலேயே உயிரிழந்த பால் வியாபாரி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பெரம்பூரில் படுக்கை அறையில் இருந்த ஏசி இயந்திரம் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏசி இயந்திரமே எமனாக மாறி பலியான இளைஞரின் பெயர் ஷியாம் என்பதாகும். இவர் சென்னை பெரம்பூர் திருவிக நகர் மணவாளன் தெருவில் பால் பாக்கெட் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனலட்சுமி,24 என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆடி மாதம் என்பதால் இருவரும் பிரிந்து தனலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று இரவு ஷியாம் தனது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது.

வீட்டின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை பிரபாகரன் அலறி அடித்துக் கொண்டு கீழே வந்து பார்த்தபோது வீட்டிற்குள் புகை மண்டலமாக இருந்தது. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடனே திறக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுக்கை அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஏசி இயந்திரம் வெடித்து சிதறிய அதனால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தீ விபத்தில் டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கருகியிருந்தன. படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த ஷியாமும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை பிரபாகரன் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிக நகர் காவல் துறையினர் கருகிய நிலையில் இருந்த ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதத்தில் பால் வியாபாரி ஷியாம் உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் தம்பதி காயம்.. பதறிய செந்தில் பாலாஜி! மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்! குவியும் பாராட்டுவிபத்தில் தம்பதி காயம்.. பதறிய செந்தில் பாலாஜி! மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்! குவியும் பாராட்டு

English summary
In Perampur, a milk trader died due to burns due to an AC machine explosion in his bedroom. Police are investigating the accident. AC exploded due to an electrical short circuit.

Source: https://tamil.oneindia.com/news/chennai/27year-old-milk-trader-died-in-ac-blast-in-chennai-468852.html