சென்னை-புறநகரில் அதிகாலை முதல் மழை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி மற்றும் தென்மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. தென்மேற்கு பருவ மழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்த போதிலும் சென்னையில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் சில பகுதிகளில் கன மழையும் பெய்தது. விட்டு விட்டு பெய்த மழை காலையிலும் நீடித்தது. வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதோடு சிறு சிறு தூறலாக பெய்து வருகிறது.

சென்னை நகரம் முழுவதும் மழை தூறல் காலையில் இருந்து பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பள்ளிக்கு செல்லக்கூடிய நேரத்திலும் மழை பெய்ததால் பெற்றோர்கள் மழையில் நனைந்துகொண்டு குழந்தைகளை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

சென்னையையொட்டிய புறநகர் பகுதியிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பஸ்சுக்கு நிறுத்தங்களில் காத்து நின்ற பயணிகளும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

ஆனாலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும் வீசுவதால் சென்னை மக்கள் ரம்மியமான இந்த சூழலை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டனர்.

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-morning-rain-in-chennai-suburbs-494922