கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள், தற்போதைய ஆணையர்கள் ஆஜர் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியா பகுதியில் உள்ள சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றபடவில்லை என்று கூறி 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த விக்ரம் கபூர், மண்டல அதிகாரியாக இருந்த மோகனகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கட்டிடம் தனியாருக்கு சொந்தமானது. அதனால் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதா? என கேள்வி எழவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு கண்டனம்

அதற்கு நீதிபதிகள், “40 அடி சாலை 20 அடி சாலையாக சுருங்கும் அளவிற்கு எழுப்பப்பட்டுள்ள கட்டிடத்திற்கான திட்ட அனுமதி குறித்து மாநகராட்சி அப்போதைய ஆணையரும், மண்டல அதிகாரியும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மண்டல அதிகாரி மட்டும் ஆஜராகி இருந்தார். தவிர்க்க இயலாத காரணங்களால் முன்னாள் ஆணையர் விக்ரம் கபூர் ஆஜராக இயலவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அதிகாரிகள் தங்களை ஐகோர்ட்டுக்கு மேலானவர்கள். தங்களுக்கு மேல் யாரும் இல்லை என்று நினைக்கின்றனர் என்று விமர்சித்தனர். அரசு தரப்பில், இந்த வழக்கில் தங்கள் தரப்பில் தவறுகள் உள்ளதால், அபராதம் விதித்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக கூறப்பட்டது.

எச்சரிக்கை

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் விக்ரம் கபூர், தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பிற்பகலில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக வாரண்டு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். அதன்படி, பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது, அதிகாரிகள் இருவரும் நேரில் ஆஜராகினர். அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், “இந்த சாலை ஆக்கிரமிப்பு கட்டிடம் தொடர்பாக சிவில் வழக்கு விவரங்களை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். எதிர்காலத்தில் நேரில் ஆஜராக வேண்டியது வந்தால், தவறாமல் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/former-and-present-commissioners-of-chennai-corporation-appear-in-contempt-of-court-case-760457