குட்நியூஸ்.. சென்னையில் பீச்களின் லுக்கே மாற போகுது.. களமிறக்கப்பட்ட அதிகாரிகள்! மாநகராட்சி அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட மூன்று கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் மெரினா, பெசன்நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரையில் அதிக அளவு மக்கள் கூட்டம் திரளும். இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்ய அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் அதிகாரிகள் இந்த ஆய்வினை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசு கடந்த 2018 ஜூன் மாதம் அரசாணையை வெளியிட்டது. இதனையடுத்து 2019 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த அரசாணை அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோரிடம் அபராதம் விதிக்கப்பட்டடு அந்த பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சென்னை கடற்கரையில் உள்ள கடைகளில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் மேலெழுந்தன. இதனையடுத்து கடந்த 5ம் தேதி முதல் மெரினா, பெசன்ட்நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் உள்ள கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொள்ள மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. உத்தரவின் பேரில் தற்போது அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதல் நாளன்று 68 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 18 கடை உரிமையாளர்களிடமிருந்து சுமார் ரூ.1,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 27ம் தேதி முதல் 2ம் தேதி வரை மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் 2,548 உரிமையாளர்களிடமிருந்து 1,861 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,17,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து முக்கிய உத்தரவு ஒன்றை பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருந்தது.

அதாவது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2020ம் ஆண்டு ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட வகை பிளாஸ்டி பயன்பாட்டுக்கு தடை விதித்தது. ஆனாலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் சந்தைகளில் எளிதாக கிடைக்கிறது. எனவே அரசின் உத்தரவை முறையாக கடைப்பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த உத்தரவையடுத்து சென்னை கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Several people visit Marina, Besant Nagar and Thiruvanmiyur beaches during weekends and holidays. Marina is the second longest beach in the world and has international visitors as well.

Source: https://tamil.oneindia.com/news/chennai/illegally-used-plastics-on-chennai-beaches-officers-are-investigating-469822.html