சென்னை மாநகராட்சி Vs ஒப்பந்ததாரர்கள் | பணிகளை முடிக்க Strike Rate; முடிக்காவிடில் Blacklist – அனல் பறந்த மழைநீர் வடிகால் கூட்டம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: “ஸ்ட்ரைக் ரேட்” நிர்ணம் செய்து மழைநீர் வடிகால்கள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், உரிய காலத்தில் முடிக்காவிடில் கருப்புப் பட்டியல் நிச்சயம் என்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2071 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த மழை நீர் வடிகால் முறையாக தூர்வாரி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால்தான் மழைக் காலங்களில் தண்ணீர் எந்த தடையும் இன்றி செல்ல முடியும். இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை 4 மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி தொடங்கியது. இதன் விவரம்:

  • சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் முதல் கட்டத்தில் 86 கோடியில் 45.23 கி.மீ நீளம்
  • உலக வங்கி நிதியில் ரூ.119.93 கோடியில் 40.92 கி.மீ நீளம்
  • மூலதன நிதியில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில், 2.05 கி.மீ நீளம்
  • உள் கட்டமைப்பு நிதியில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 9.80 கி.மீ நீளம்
  • சிங்கார சென்னை 2.0 2வது கட்டத்தில் ரூ.70 கோடியில் 20.15 கி.மீ நீளம்
  • வெள்ள தடுப்பு நிதியில் 291.13 கோடியில் 107 கி.மீ நீளம்
  • மொத்தம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முடிக்கப்படாத இலக்கு: சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் இலக்கு நிர்ணயம் செய்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி மேற்கண்ட திட்டங்கள் தற்போது வரை 60 முதல் 70 சதவீத பணிகள் முடிந்து இருக்க வேண்டும். ஆனால், 50 முதல் 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இவற்றில் ஒரு சில பணிகள் வேகமாக நடைபெற்றாலும் பெரும்பாலான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சென்னை பருவமழை தொடங்க 50 முதல் 60 நாட்களே உள்ள நிலையில் பணிகளை வேகப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து 5-ம் தேதி ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகளின் விவரம்:

உங்களை நம்புகிறோம்: இந்தக் கூட்டத்தல் பேசிய மூத்த அதிகாரி ஒருவர், “நாங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு அதிக அழுத்தம் தருகிறோம். அதையும் மீறிதான் நீங்கள் இந்த பணிகளை செய்து கொண்டு உள்ளீர்கள் என்பது தெரியும். உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் அதை செய்து தர சென்னை மாநகராட்சி தயராக உள்ளது. எனவே நீங்கள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். டிடிகே சாலை முதல்வர் வாகனம் செல்லும் சாலை என்பதால் அவரிடம் அனுமதி பெற்று எல்லாம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை முடித்தால் உங்களுக்குதான் பெருமை. நாங்கள் உங்களை நம்புகிறோம்” என்றார்.

பொறுத்துக்கொள்ளும் மக்கள்: மற்றொரு அதிகாரி ஒருவர் பேசுகையில், “பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக இணைப்புகளை அளிக்க வேண்டும். பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் செல்லும் அளவிற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். உலக வங்கி பணிகளை மழைக்கு முன்பாக முடிக்க வேண்டும். சென்னையில் அனைத்து பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள தோண்டி வைத்துள்ளோம். இதை மக்கள் பொறுத்துக்கொண்டு உள்ளனர். நாம் பணிகளை முடிக்காவிடில் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும்” என்றார்.

பாதுகாப்பில் கவனம்: மற்றொரு உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளையும், சிறிய வெள்ளதடுப்பு பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டும். பணிகளை முடிக்காவிடில் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருக்க வேண்டும். 2 பேரி கார்டுகளை வைத்துவிட்டு இடையில் டேப் போடக் கூடாது. டேப் வாகனங்களை தடுக்காது. எனவே முழுமையாக பேரி கார்டுகளை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

ஸ்ட்ரைக் ரேட்: மற்றொரு உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “மழை தொடங்க இன்னும் 60 நாட்கள் மட்டும்தான் உள்ளது. இடையில் மழை பெய்தால் பணி செய்ய முடியாது. இதன்படி பார்த்தால் 50 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே இந்த 50 நாட்களில் இந்த பணிகளை முடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் முடிக்க வேண்டிய நீளம் எவ்வளவு உள்ளது, தினசரி எவ்வளவு கி.மீ முடித்தால் இந்த முடிக்க வேண்டும் என்று ஸ்ட்ரைக் கணக்கீட்டு பணிகளை முடிக்க வேண்டும்” என்றார்.

கருப்பு பட்டியல்: மேலும் அவர் கூறுகையில், “உரிய காலத்தில் ஒப்பந்தங்களை முடிக்காத ஒப்பந்ததாரர்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இனிமேல் அவர்களுக்கு எந்த ஒப்பந்தமும் அளிக்கப்படாது. நீளத்தை மட்டும் முடித்து விட்டு பணிகளை முடித்து விட்டோம் என்று தெரிவிக்கக் கூடாது. அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும். எல்லா பணிகளையும் முடித்து விட்டு பைப்புகளை போடக் கூடாது. பணிகளை நடைபெற்று கொண்டு இருக்கும் போதே இதுபோன்ற பணிகளை செய்ய வேண்டும்” என்றார்.

3 மணி நேரம்: இந்தக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இதில் பணி அடிப்படையில் பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற ஒப்பந்ததாரர்கள் வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதில் மிகவும் குறைவாக பணிகளை முடித்து சிறப்பு நிறத்தில் உள்ள ஒப்பந்தாரர்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து, பணி ஏன் தாமதம் அடைகிறது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி பதில் பெற்றனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளும் இதற்கு பதில் அளித்தனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/836292-chennai-corporation-blacklisting-contractors-for-not-completed-work.html