பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கப்பல் சென்னை வருகை | US ship arrives in Chennai tamil nadu for first time for repairs – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை அடுத்த காட்டுப்பள்ளிக்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது.

தற்போது, இந்தியா – அமெரிக்கா இடையே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், அமெரிக்ககடற்படையைச் சேர்ந்த சார்லஸ் டிரியூ என்ற கடற்படை சரக்குக் கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதல்முறையாக நேற்று இங்கு வந்தது.

இக்கப்பலை எல் அண்டு டி துறைமுகத்தில், மத்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய்குமார் வரவேற்றார். அவர் பேசும்போது, ‘‘2015-16 ஆண்டில், ரூ.1,500 கோடியாக இருந்த ராணுவ தளவாட ஏற்றுமதி, தற்போது ரூ.13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 7 ஆண்டுகளில் இது 80 சதவீத வளர்ச்சி’’ என்றார்.

பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் சஞ்சய் ஜாஜு, இணை செயலர் ராஜீவ் பிரகாஷ், டெல்லி அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்புத் துறை அதிகாரி மைக்கேல் பேக்கர், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜுடித் ராவின், எல் அண்டு டி அதிகாரி ஜே.டி.பாட்டீல் உள்ளிடடோர் பங்கேற்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/836995-us-ship-arrives-in-chennai-tamil-nadu-for-first-time-for-repairs.html