2 மணி நேரத்தில் பெங்களூரு- சென்னை பயணம்: தயாராகும் புதிய விரைவுச் சாலை – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Tamil News: பெங்களூரிலிருந்து சென்னை வரை வரவிருக்கும் புதிய விரைவுச் சாலை மக்களின் பயண நேரத்தை குறைக்க உருவாகிறது.

பெங்களூருவிலிருந்து சென்னை வரை கட்டப்படும் விரைவுச்சாலைக்கு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு – சென்னை விரைவுச் சாலை ரூ.14,870 கோடி செலவில் காட்டப்படுகிறது. இது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக செல்லும்.

பெங்களூரின் புறநகரில் உள்ள ஹோஸ்கோட்டில் தொடங்கி, மாலூர், பங்கார்பேட்டை, கோலார் தங்க வயல் (கேஜிஎஃப்), பலமனேர், சித்தூர், ராணிப்பேட்டை நகரங்கள் வழியாகச் செல்லும். தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்த விரைவுச் சாலை முடிவடையும்.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 26 இடங்களில் விரைவுச் சாலைகள் அமையும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையும் ஒன்று என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே தற்போதைய சராசரி பயண நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும். இந்த விரைவுச் சாலை கட்டப்பட்டவுடன் இரண்டு மணி நேரத்தில் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், டெல்லியில் இருந்து டேராடூன், ஹரித்வார் அல்லது ஜெய்ப்பூருக்கு மக்களால் இரண்டு மணி நேரத்தில் பயணிக்கும் படி எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டால், 

  • டெல்லியில் இருந்து சண்டிகருக்கு 2.5 மணி நேரத்திலும், 
  • டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் வரை நான்கு மணி நேரத்திலும், 
  • டெல்லியில் இருந்து கத்ராவுக்கு 6 மணி நேரத்திலும், 
  • டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 8 மணி நேரத்திலும், 
  • டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்திலும், 
  • டெல்லியில் இருந்து சென்னைக்கு 12 மணி நேரத்திலும் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-tamil-news-express-way-from-chennai-to-bengaluru-492757/