சென்னையில் உணவுத் திருவிழா: ஒரு கட்டுகட்டலாம் வாங்க! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Tamil News: சென்னை மக்களுக்கு மற்றொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உணவுத் திருவிழா-2022 இன்று களமிறங்குகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இருக்கும் தீவுத் திடலில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை பாரம்பரிய உணவு வகைகளுடன் கோலாகலமாக நிகழவிருக்கிறது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், விழிப்புணர்வு நடைப்பயணம் ஆகஸ்ட் 14ஆம் நாள் நடைபெறவுள்ளது. மேலும், இத்திருவிழாவில் பங்கேற்கும் குழந்தைகள், தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுவார்கள்.

‘ஈட் ரைட் இந்தியா’ என்பது மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஆகியோர் கொண்டுவரப்பட்ட ஒரு முயற்சியாகும். 

இது இந்தியாவின் சுற்றுசூழல் சுகாதாரத்தை மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும்,  நோய்களை எதிர்த்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

‘சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022’இல் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். மேலும் இத்திருவிழா மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றுப்பரவளின் காரணத்தால் கடந்த ஆண்டு நடக்கவிருந்த உணவு திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து இந்தாண்டு பெரும் வரவேற்புடன் சென்னை மக்களுக்காக தயாராகிறது.

ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவின் பல வகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுத் திருவிழா மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“இத்திருவிழாவில் 90 சதவீதம் பாரம்பரிய உணவு பொருட்களாக இருக்கும். மேலும், தமிழ்நாடு மாவட்டங்கள் தோறும் உணவுத் திருவிழாவை நடத்த யோசித்திருக்கிறோம். சென்னையில் நடக்கும் இத்திருவிழாவில் 150 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்கள் சுமார் 10 ஸ்டால்கள் வைக்கவிருக்கின்றனர்.

உணவுத் திருவிழாவை பார்க்க வரும் சென்னை மக்களுக்கு நுழைவு கட்டணம் இலவசம். திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா உட்பட அனைத்து பிரபலமான உணவகங்களும் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெற்றிருக்கும் என்று கூறுகின்றனர்,” என இத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-food-festival-from-12-to-14-august-493343/