75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: கண்கவர் மின்விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மாநகரம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.

75-வது சுதந்திர தின விழா வருகிற 15- ந்தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையின் பல இடங்களில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னையின் பழமை வாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்திலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் பலூன் அலங்காரங்கள் செய்யப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலைய பாரம்பரிய கட்டிடங்களில் மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன.

தலைமைச்செயலகம் அமைந்து உள்ள சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பாரம்பரிய ரிப்பன் மாளிகை கட்டிடம், பாரிமுனையில் உள்ள பழங்கால கட்டிடங்கள், தனியார் நிறுவன கட்டிடங்கள், ஓட்டல்கள் அனைத்திலும் வண்ண மின்விளக்கு அலங்கார வசதிகள் செய்யப்பட்டு இரவில் ஜொலித்து வருகின்றன.

சென்னை அண்ணாநகர் ஆர்ச், ரவுண்டானா மற்றும் பிரதான சாலை வீதிகள் அனைத்தும் மூவர்ண தேசிய கொடி அலங்காரத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சாலையோர மரங்களில் அலங்கார சீரியல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் ஜொலித்து வருகின்றது. சாலைகளில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை இந்த மின்விளக்கு அலங்காரங்கள் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

இதேபோல் சென்னை மாநகரில் உள்ள முக்கிய வியாபார ஸ்தலங்களான தி.நகர், அண்ணா நகர், வடபழனி வண்ணாரப்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 75-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆர்வமுடன் மக்கள் அலங்கார பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரெயில் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் பிரமாண்ட தேசிய கொடி பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மகாகவி பாரதியின் பாடல் வரிகளுடன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பதாகைகள், மூவர்ண கொடியுடன் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய உள்பகுதியில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன.

‘ஐ லவ் இந்தியா’ என்ற வாசகத்துடன் “செல்பி” எடுத்துக்கொள்ளும் வகையிலும் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் சிறுவர், சிறுமிகள், பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Source: https://www.maalaimalar.com/news/state/75th-independence-day-celebrations-in-chennai-498734