75 ஆவது சுதந்திர தின விழா.. சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னையின் சில பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

75-வது சுதந்திர தினவிழா விழா, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ம் ஆண்டாக தேசியக் கொடி ஏற்ற உள்ளார். சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு நாலை காலை 06.00 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி, அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, உழைப்பாளா் சிலை முதல் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும்.

காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலைக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Traffic has been changed in some areas tomorrow in view of the Independence Day celebrations in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/independence-day-celebration-traffic-change-in-chennai-470794.html