சென்னை வரும் முன்னணி வீராங்கனைகள்… – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை ஓபனில் உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள  கரோலின் கார்சியா (பிரான்ஸ்), அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் (அமெரிக்கா), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்),   மாக்தா லினெட் (போலந்து), ரெபக்கா பீட்டர்சன் (சுவீடன்) உட்பட பலர் பங்கேற்கின்றனர். அங்கிதா ரெய்னா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள்  சிறப்பு அனுமதி மூலமும், தகுதிச் சுற்று மூலமும் பங்கேற்க உள்ளனர். அலிசன் ரிஸ்க் எனது சகோதரர் ஆனந்த் மகன் ஸ்டீபன் அமிர்தராஜை மணந்துள்ளார். அதனால் அவர் எங்கள் அமிர்தராஜ் குடும்பத்தின் மருமகள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சானியா மிர்சா காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு. அடுத்தடுத்து வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டி உள்ளது. ஆனாலும், இந்த ஆண்டுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதால் அவரை அழைத்து போட்டியின்போது கவுரவிக்க உள்ளோம். தகுதிச் சுற்று ஆட்டங்கள் செப்.10, 11 தேதிகளில் நடக்கும். அதன் பிறகு பிரதான சுற்று செப்.12ம் தேதி தொடங்கும்.   

ஏடிபி  சென்னை ஓபன் போட்டியை மீண்டும் நடத்துவதற்கான முயற்சியை தொடர்கிறோம். ஏற்கனவே திட்டமிடப்பட்ட உலக அட்டவணையில்,  புதிதாக போட்டியை  நுழைக்க, நடத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும் எங்கள் முயற்சி தொடரும். சென்னையில் உள்ள மாணவர்கள், மாணவிகள் யார் வேண்டுமானாலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கில்  பயிற்சி பெறுலாம். அவர்களுக்கு எங்கள் பயிற்சியாளர்கள் இலவசமாக பயிற்சி தருவார்கள். எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம்.
– தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ்

முதல்வர் முடிவு செய்த முத்திரை
விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் அபூர்வா பேசும்போது, ‘சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்துவதில் முதலமைச்சர் மிகவும் தீவிரம் காட்டுகிறார். சென்னை ஓபனுக்கான முத்திரையை கூட  முதல்வர்தான் முடிவு செய்தார். அந்த அளவுக்கு இந்தப் போட்டி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார்’ என்றார்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=793490