மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி முதல்வர் குமாரசாமி ராஜாவின் வரலாற்றை நினையூட்டும் நினைவிடம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கல்வியில் சிறந்த விருதுநகர் மாவட்டம் இதுவரை பல தலைவர்களையும், அறிஞர்களையும் நாட்டிற்கு தந்துள்ளது. எங்கும் இல்லா சிறப்பாய் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இருபெரும் தலைவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளனர்.

இருவரில் ஒருவர் கர்மவீரர் காமராஜர் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த இன்னொருவர் யார் என்பது தான் இதை படித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். அவர் தான் P.S குமாரசாமி ராஜா. பூசாதிபதி சஞ்சீவி குமாராசாமி ராஜா.

குமாரசாமி ராஜா நினைவிட அறிவிப்பு பலகை

இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர். 1898ம் ஆண்டு ஜூலை 8 தேதி மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள இராஜபாளையம் என்ற ஊரில் பிறந்தார். இளமையிலேயே தாய், தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த இவர், பிற்காலத்தில் காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பின்பு சுதந்திர போராட்ட வீரராக மாறினார்.

குமாரசாமி ராஜா நினைவிடம்

குறிப்பாக காந்தியடிகளின் முக்கிய கொள்கையான கதருக்கு உயிரூட்டியவரே இந்த குமாரசாமி ராஜா தான். காதி துணிகளுக்கு ஆதரவு, ஆலய நுழைவு போராட்டம் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.

கடைசி முதலமைச்சர்:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர் இரு முறை மெட்ராஸ் மாகாண முதல்வராகவும், ஒடிசா மாநில ஆளுநராகவும இருந்துள்ளார். இவர் தான் மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி முதலமைச்சர் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். முதலமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சரவையில் விவசாயம், கதர், நீர்வளம் இவற்றிற்கென தனி தனி இலாகாக்களை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும்.

குமாரசாமி ராஜா நினைவிடம்

இவரின் முன்னோர்கள் ஆந்திர பகுதியில் இருந்து இங்கே படைவீரர்களாக வந்த காரணத்தால் இவர்கள் ராஜபாளையம் பகுதியில் ராஜ குடும்பத்தினராக கருதப்பெற்றனர். செல்வாக்கான குடும்பம் எனினும் தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளாமல் அனைத்தையும் நாட்டிற்கென கொடுத்த தன்னலமற்ற தலைவர் தான் இந்த ராஜா. இறுதியில் தன்னுடைய வீட்டையும் காந்தி கலைமன்றமாக மாற்றினார்.

குமாரசாமி ராஜா நினைவிடம்

இன்றும் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் காந்தி கலைமன்றத்தை காணலாம். இன்றைய மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் மெரினா கடற்கரையில் உறங்கி கொண்டிருக்க, இவர் மட்டும் 16 மார்ச் 1957ல் இருந்து மீண்டும் ராஜபாளையத்துக்கு மீளா துயில் கொள்ள சென்றுவிட்டார்.

ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் சஞ்சீவி மலையடிவாரத்தில் எந்தவித ஆரவாரமும் இன்றி இருக்கும் P.S குமாரசாமி ராஜாவின் சமாதியை காணலாம். எழிலுற பராமரிக்கப்பட்டு வரும் இந்த நினைவகத்திற்கு, இதுவரை ஆச்சார்யா வினோபாவே, கருணாநிதி போன்றோர் வந்து சென்றுள்ளனர்.

தற்போது PSK அவர்களின் குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் இந்த நினைவகத்தில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ராஜபாளையம் வந்து செல்லும் மக்கள் இங்கு வந்து செல்வதன் மூலம் இவரின் தியாகத்தை உணரமுடியும் என்பதில் ஐயமில்லை.

செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/viluppuram/virudhuangar-former-chief-minister-kumaraswamy-raja-memorial-790585.html