மெட்ராஸ் வேண்டாம்.. சென்னை.. தலைநகரின் பெயரை மாற்றி கருணாநிதி சாதித்தது எப்படி? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நம்ம சென்னைக்கு இப்போ 383 வயசு. சரியா சொன்னா சென்னைக்கு 26 வயசுதான். மெட்ராசுக்குதான் 383 வயசு. என்ன குழப்பமா இருக்கா? அது அப்படித்தான்.

சென்னைக்கு இதற்கு முன்னால் பல பெயர்கள் இருந்தன. கொரமண்டல் கடற்கரை, மதராசபட்டினம், சென்னைப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ் என்று யார் ஆண்டார்களோ அவர்களின் ஆட்சிக்கு ஏற்ப பெயர்களும் காட்சி தந்தன.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ என்றே அழைக்கப்பட்டது. அதன் சட்டப்பேரவையும் அதே பெயரிலேயே குறிப்பிடப்பட்டது. இதன் நிலப்பரப்பு ஏறக்குறைய இன்றைய ஒடிசாவரை இருந்தது. குடகுகூட அன்று மெட்ராசின் ஒரு அங்கம்தான்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா என எந்த மாநிலமும் அப்போது பிறக்கவில்லை. மொத்தமா மெட்ராஸ்தான். இந்த மெட்ராஸ் பிரசிடென்சிக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பெருமை அண்ணாவையே சேரும். இந்தக் கோரிக்கையை முன்வைத்துச் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு தன் உயிரையே அர்ப்பணித்தார் சங்கரலிங்கனார்.

1957க்கு முன்பே கார், வீடு வைத்திருந்த தலைவர் கருணாநிதி.. நெகிழ்ச்சியுடன் பேசிய கரு.பழனியப்பன்!1957க்கு முன்பே கார், வீடு வைத்திருந்த தலைவர் கருணாநிதி.. நெகிழ்ச்சியுடன் பேசிய கரு.பழனியப்பன்!

மெட்ராஸ் பிரசிடென்சி டு தமிழ்நாடு

1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் ‘சென்னை மாகாணம்’ ‘தமிழ்நாடு’ என மாற்றப்படுவதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 23 இல் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 1 ஆம் தேதி 1968 ஆம் ஆண்டு பாலர் அரங்கத்தில் முறைப்படி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. அண்ணா அதிகாரப்பூர்வமாக அந்தப் பெயரை அறிவித்தார்.
‘தமிழ்நாடு’ பிறந்தபோது அதற்குள் ‘மெட்ராஸ்’ வந்துவிட்டது. மாநிலத்தின் பெயர் மாறினாலும் வரலாற்றுப் பழமையான ‘மெட்ராஸ்’ மாறவில்லை. தலை தப்பித்து தமிழ்நாட்டின் தலைநகரமாக ஆனது.

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி

அண்ணா ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றிய பிற்பாடு ‘செந்தமிழ் நாட்டின் தலைநகரத்தின் பெயரைத் தமிழில் மாற்றவேண்டும்’ எனக் கோரிக்கை வலுத்தது. பல அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அண்ணாதுரை ‘தமிழ்நாடு’ என மாற்றிய பிறகு ஏறக்குறைய 28 ஆண்டுகள் கழித்து அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி, 1996 ஜூலை மாதம் 17 ஆம் தேதி ‘மெட்ராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என மாற்றி அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். திமுக ஆட்சி செய்த காலத்தில் மாபெரும் இரண்டு மாற்றங்களை நம் மாநிலம் கண்டது. முதலில் அக்கட்சியின் நிறுவனரான அண்ணாதுரை இந்த மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என மாற்றினார். அவரது ‘தம்பி’யாக அவருக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மு.கருணாநிதி ‘மெட்ராசை’ சென்னையாக மாற்றினார். இந்த இரண்டு பெருமையும் திமுகவையே சாரும்.

சென்னை பெயருக்கும் எதிர்ப்பு

அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, தமிழ்நாட்டின் தலைநகருக்கு ‘சென்னை’ எனப் பெயரிட்டபோது சிலர் அதனை எதிர்த்தனர். ‘தமிழகத்தின் தலைநகருக்குத் தெலுங்கரின் பெயரை வைப்பதா?’ எனக் கேள்வி எழுப்பினர். அந்த அச்சத்திற்குக் காரணமாக இருந்தவர் சின்னப்ப நாயக்கர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த மு.கருணா நிதி, நினைத்திருந்தால் வேறு சில பெயர்களை வைத்திருக்கலாம். ஆனால் வரலாற்றின் வேர்களை அறிந்த அவர் ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழம் பெருமை கொண்ட இந்த மாபெரும் நகரத்திற்கு இப்பெயரையே சூட்ட வேண்டும் என்று தெளிவாக இருந்தார். என்றோ வரலாற்றில் வாழ்ந்த பூர்வக் குடி ஒருவருக்கு நியாயம் செய்ய வேண்டும் என அவர் விரும்பி இந்தப் பெயரைத் தேர்வு செய்தார்.

யார் இந்த சின்னப்ப நாயக்கர்

சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் உள்ள பிரிட்டிஷ் ஆவணங்கள், சின்னப்ப நாயக்கரிடம் இருந்துதான் இந்தியாவுக்கு வர்த்தகம் செய்யவந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்கான இந்த நிலத்தை குத்தகைக்கு வாங்கியதாகக் கூறுகின்றன. 1639 காலகட்டத்திலேயே இப்பகுதி மெட்ராஸ் மற்றும் சென்னை என்ற இரு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சான்றுகள் சொல்கின்றன. கிழக்கிந்திய கம்பெனியால் கையகப்படுத்தப்பட்ட இந்த நிலம் மதராசப்பட்டினம் மற்றும் சென்னைப்பட்டினம் என்ற இரண்டு பகுதிகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மதராசப்பட்டினமாக இருந்த வடக்கும் சென்னப்பட்டினமாக இருந்த தெற்கும் விரைவாக இணைக்கப்பட்டது. இரண்டையும் இணைத்து ஒரு நகரமாகக் கட்டமைத்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான். மதராசப்பட்டினம் என்ற பெயரைக் காட்டிலும் சென்னைப்பட்டினம் என்ற பெயருக்கு ஒரு திராவிட சாயல் இருந்ததாக நம்பப்படுகிறது. சென்னு என்ற தெலுங்கு வார்த்தை சென்னையாக உருமாறியதாகக் கூறப்படுகிறது. மதராஸ் என்பதில் போர்த்துகீசிய வாடை கலந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆகவேதான் திராவிட கருத்தியலை முன்வைத்து மு.கருணாநிதி இப் பெயரை இந்நகருக்குச் சூட்டினார்.

சென்னை அடையாளங்கள்

பிரிட்டிஷார் ஆட்சியைக் காட்சிப்படுத்தும் பல்வேறு கட்டடங்கள் சென்னையில் உள்ளன. செண்ட்ரலில் உள்ள விக்டோரியா ஹால் 1890 இல் கட்டப்பட்டது. இங்குதான் முதன்முதலாக சினிமா திரையிடப்பட்டது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்ற கட்டடம் 1862 கட்டப்பட்டது. அதன் அருகில்தான் தமிழ்நாட்டின் மைல் கல் பூஜ்ஜியம் எனத் தொடங்குகிறது. இதற்கு 160 வயது. சென்னைப் பல்கலைக்கழக கட்டடம் திறக்கப்பட்டதோ 1879 இல். இதன் வயது 140க்கு மேல். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் ரயில் நிலையம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம் என சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் ஆங்கிலேய ஆட்சியின் அடையாளத்தை காணலாம். இதைப்போலவே திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் சில அடையாளங்கள் எழுந்தன. அப்படித் திட்டமிட்டு மு.கருணாநிதியின் ஆட்சியில் உருவானது தான் வள்ளுவர் கோட்டம். இந்தக் கோட்டத்தில் இன்றும் பிரம்மாண்டமாக நிற்கும் கல் தேரின் சக்கரம் ஆச்சரியத்தை அள்ளி வழங்கும் கட்டடக் கலைகளில் ஒன்று.

அண்ணா மேம்பாலம் அதிசயம்

தமிழ் இலக்கியத்தில் உள்ள காப்பியங்களுக்கு உருவம் கொடுக்கும் திட்டத் தை முதன்முதலாகச் செய்தார் மு கருணாநிதி. அதன் அடையாளமாக உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘சிலப்பதிகார’த்தின் முகமாக முன்வைக்கப்படும் கண்ணகிக்கு சிலை எழுப்பினார். தமிழின் பழம்பெரும் அறநூலாகக் கூறப்படும் வள்ளுவருக்கும் அதே வரிசையில் சிலை நிறுவினார். இவற்றை தாண்டி, சென்னையின் மையப் பகுதியான அண்ணாசாலையில் 1973ஆம் ஆண்டு கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் அந்தக் கால அதிசயங்களில் ஒன்றாகவே நம்பப்படுகிறது. சென்னையில் முதன்முதலாக மேம்பாலங்களின் வருகையை திமுகவின் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் வரிசையில் இன்று தமிழகம் முழுக்க மேம்பாலங்கள் இல்லாத ஊர்களே இல்லை எனச் சொல்லும் அளவுக்குப் பல பாலங்கள் பெருகி உள்ளன.

பிரமாண்ட சென்னைக்கு வித்திட்ட கருணாநிதி

இன்றைக்கு பல்நோக்கு மருத்துவமனையாக அண்ணாசாலையில் உள்ள பழைய தலைமைச் செயலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே மிகப் பெரியதாகப் பார்க்கப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம், சர்வதேச அடையாளமாக உயர்ந்து நிற்கும் டைடல் பார்க் கட்டடம் என இவை யாவும் திராவிடக் கட்டிடக்கலையின் சாட்சியாகக் காட்சிக்கு இன்றும் நிற்கின்றன. மெட்ராஸ் என்பது வெறும் பெயர் அளவில் சென்னையாக மாறவில்லை. உருவத்திலும் தொழில்நுட்பத்திலும் இந்த ஊர் உலகத் தரத்திற்கு மாறியுள்ளது என்பதே உண்மை.

English summary
The city has undergone many changes since former Chief Minister M Karunanidhi renamed Madras as Chennai. Here is the flash back.

Source: https://tamil.oneindia.com/news/chennai/how-karunanidhi-renamed-madras-as-chennai-472246.html