24 பேருக்கு சென்னை தின விருதுகள்: அமைச்சர் வழங்கினார் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை தினத்தையொட்டி, கலை, சமூக சேவை, சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 24 பேருக்கு “என் சென்னை, யங் சென்னை’ விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் தன்னார்வ அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் “தி ஐடியா பேக்டரி’, “எர்த் அண்ட் ஏர்’ அமைப்பின் சார்பில் சென்னை மக்களின் கல்வி, சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு “என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோர், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் சாவித்திரி சேகர், பெண்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் “பரிக்ஷான்’ அறக்கட்டளை, நெகிழிப் பொருள்களின் தீமை குறித்து பல்வேறு செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கௌதம் ஆகியோர் உள்ளிட்ட சிறப்பாக சேவையாற்றிவரும் 24 பேருக்கு இவ்விருதுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி கௌரவித்தார். இதையடுத்து, சென்னை மாநகரின் பாரம்பரியம், சிறப்புகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார். மேலும், முதியோர் நலன், ரத்ததானம், கல்விக்கான உதவி குறித்த பிரத்யேக செயலியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/aug/24/24-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3903921.html