சென்னை: சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் பணம் பறிமுதல் – வடமாநில வாலிபர் கைது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை, எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை-5ல் வந்து நின்றது.

அதில் இருந்து சந்தேகிக்கும் படியான நபர் ஒருவர் இறங்குவதை கண்ட போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தால், அவரின் பையை சோதனையிட்டனர். அதில் ரூ.17 லட்சம் எந்த வித ஆவணமும் இன்றி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அந்த நபர், தனது உடலிலும் ரூ.20 லட்சம் பணத்தை கட்டி மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு வந்த நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஆனந்த்ராவ் ஷின்டே (வயது 30) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.37 லட்சத்தை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-rs-37-lakh-cash-seized-at-central-railway-station-northern-youth-arrested-780111