சென்னை வேளச்சேரியில் அதிர்ச்சி: 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகள் பறிமுதல்..! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் சிவா மற்றும் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கொண்ட தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று அந்த 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 4,400 மாத்திரைகள் மற்றும் 90 டானிக்குகள் இருந்தன.

வலி மற்றும் சளி போன்றவற்றிற்காக வழங்கப்படும் இந்த மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி அந்த பகுதியில் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இது தொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் சுல்தான் அலாவுதீனும் நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/shock-in-chennai-velachery-4400-narcotic-pills-90-narcotic-tonics-seized-783047