சென்னை பஸ்களில் வரும் சூப்பர் வசதி.. பேருந்து எங்கே இருக்கிறது என்ற அறிவிப்பு இனி ஸ்பீக்கரில் வரும் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தலைநகர் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் மிக விரைவில் அட்டகாசமான ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் விரிவான போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களுக்குப் பேருந்து வசதி உள்ளது.

டவுன் பஸ்கள், விரைவு பேருந்துகள், தொலைதூர பேருந்துகள் என பல்வேறு பேருந்துகள் மாநிலத்தில் இருக்கும் பல போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படுகிறது.

பஸ் படியில் பயணம்..ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் புதுக்கோட்டை மாணவர்கள்.. இறக்கி விட்ட நடத்துனர்பஸ் படியில் பயணம்..ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் புதுக்கோட்டை மாணவர்கள்.. இறக்கி விட்ட நடத்துனர்

சென்னை

குறிப்பாகச் சென்னையைப் பொறுத்தவரை எம்டிசி எனப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் பேருந்துகளில் பயணிப்போர், குறிப்பாகப் புதிதாகப் பயணிப்போர் நிறுத்துமிடங்களைக் கண்டறிவதில் பல சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இறங்க வேண்டிய இடத்தை நடத்துநர் அறிவிக்க மறந்தால், இவர்களின் பாடு திண்டாட்டம் தான்.

ஜிபிஎஸ் டிராக்கிங்

ஆனால், புறநகர் ரயில்களில் இந்த பிரச்சினை இருக்காது. அடுத்து எந்த ரயில் நிலையம் வர உள்ளது என்பது ரயிலுக்கு உள்ளேயே அறிவிக்கப்படும். இதனால் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பயணிகளால் சரியாக இறங்கி விட முடியும். சென்னை எம்டிசி பேருந்துகளிலும் இந்த வசதியைக் கொண்டு வர வேண்டும் எனப் பல ஆண்டுகளாகவே கோரிக்கை உள்ளது. இதற்கான பணிகள் இரு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.

விறுவிறு பணிகள்

இதற்காகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஓடும் சுமார் 6000 பேருந்துகளில் இருக்கும் இடத்தை கண்டறியும் ஜியோ-கோடிங் செய்யப்பட்டன. இருப்பினும், அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இப்போது அந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 500 பேருந்துகளில் ஜியோ-கோடிங் கண்டறியும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதிய வசதி

இதன் பின்னர் அனைத்து பஸ்களிலும் ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது. பேருந்து முழுக்க இருக்கும் பயணிகள் கேட்கும் வகையில் இதற்காக மொத்தம் 6 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டு, பேருந்து நிலையங்கள் குறித்த தகவல்களை அறிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர், இந்த வசதி படிப்படியாக அனைத்து பேருந்துகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

எப்படிச் செயல்படும்

முதற்கட்டமாக பஸ் ஸ்டாப் குறித்த அறிவிப்புகள் தமிழில் மட்டுமே இருக்கும். அதன் பின்னர், ஆங்கிலத்திலும் இதை அறிவிக்கும் வகையில் அப்டேட் செய்யப்படும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு சுமார் 250 மீட்டருக்கு முன்னரே பஸ் ஸ்டாப் குறித்த அறிவிப்பு வரும். சென்னையில் இயங்கும் அனைத்து வகையான பேருந்துகளிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
MTC recently commenced the installation of a GPS-based system to announce the approaching stop: MTC’s new scheme to announce the details of upcoming bus stops.

Source: https://tamil.oneindia.com/news/chennai/mtc-to-introduce-announcement-of-upcoming-bus-stops-in-chennai-buses-473819.html