சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை, கொச்சி, மைசூரு நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தொடர்ந்து உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக வைத்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

அந்த நிறுவனம் தற்போது சென்னையையும் மையமாக வைத்து அதிகமான உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இனிமேல் அவை 22 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு கூடுதல் விமான சேவை வசதிகள் கிடைக்கும். இதேபோல் இந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து மாலை 6:10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஆகாசா ஏர் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.

அதன்பின்பு அதே விமானம் மீண்டும் இரவு 8:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு மும்பை சென்றடைகிறது. இதுவரை சென்னை மும்பை இடையே 19 புறப்பாடு விமானங்கள்,19 வருகை விமானங்கள் மொத்தம் 38 விமானங்கள் உள்ளன. அது இனிமேல் 40 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.

வருகிற 26-ந் தேதியில் இருந்து ஆகாசா ஏர் விமானம், சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்கும் தினசரி விமானங்களை புதிதாக இயக்குகிறது. மாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 6 மணிக்கு கொச்சி சென்றடைகிறது. மாலை 6:15 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7:15 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை கொச்சி இடையே இதுவரை தினமும் 4 புறப்பாடு, 4 வருகை, தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. இனிமேல் இது 10 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது.

சென்னை-மைசூரு, மைசூரு-சென்னை இடையே பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தற்போது அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக சென்னை-மைசூரு-சென்னை இடையே விமான சேவைகளை தொடங்கி உள்ளது. வாரத்தில் 3 நாட்கள் இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

காலை 9:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. பின்பு மைசூரில் இருந்து காலை 11:30 க்கு அதே விமானம் புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறது. இந்த விமானம் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானம் ஆகும். 74 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம்.

இதில் சலுகை கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு ரூ.4,678 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்துள்ளது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/additional-flights-from-chennai-to-bengaluru-mumbai-kochi-mysore-785351