விதிகளை மீறுபவர்களுக்கு இனி ரூ.1,100 அபராதம்- சென்னை போலீஸ் அதிரடி – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்மையில் கியூஆர் கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த முடியாமல் இருந்த காவல்துறை இப்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறு பவர்கள் மீது அதிக அளவில் வழக்கு பதியப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக ‘ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்து உள்ளது. அதேவேளையில் ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது.

ஆனால் ராங்ரூட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.100 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த தொகையை எளிதாக செலுத்துவதாக கருதப்பட்டது.

இதையடுத்து மோட்டார் வாகன சட்டம் புதிய திருத்தத்தின்படி ராங் ரூட்டில் பயணிப்பவர்களுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்க சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த முடிவின்படி திங்கட்கிழமை முதல் ராங் ரூட்டில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் திங்கட்கிழமை மட்டும் 1,300 வாகன ஓட்டிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-chennai-police-action-to-rules-violators-will-be-fined-rs-1100-509176