சென்னை,
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒருவர் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற மதுவிலக்கு போலீசார், பல்லாவரத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அந்த நபர் அமைந்தகரை பகுதியில் வசித்து வரும் ஷானு என்ற பெண்ணிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திரிபுராவைச் சேர்ந்த ஷானுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஷானுவை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source: https://www.dailythanthi.com/News/State/a-woman-from-north-state-was-arrested-for-selling-ganja-in-chennai-787437