குட் நியூஸ்! சென்னைக்கு வரப்போகும் புதிய ஏழு மால்கள்.. லுலுவும் உண்டு.. எங்கே? எப்போது தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் கூடுதலாக 7 மால்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதி என 19 இடங்களில் மால்கள் இருக்கின்றன.

இதன் காரணமாக ஒட்டுமொத்த மால்களின் எண்ணிக்கையும் 25 ஆக அதிகரிக்க இருக்கிறது. இந்த புதிய மால்கள் பெரும்பாலும் சென்னையின் புறநகர் பகுதியில்தான் அமைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மால்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.

புதிய மால்கள்

சென்னையின் முக்கிய பகுதிகளில் மால்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் மேலும் புதிதாக 7 மால்கள் சென்னைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் லுலு குழுமத்தின் மால் ஒன்றும் உள்ளது. ‘நைட் ஃபிராங்க் இந்தியா’ எனும் வணிக நிறுவனத்தின் தரவுகளின் படி இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர். அதன்படி OMR, பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் ரோடு, திருவொற்றியூர், பெரம்பூர், மாங்காடு மற்றும் தி.நகர் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இந்த மால்கள் வர இருக்கின்றன.

தேவை அதிகரிப்பு

ஷாப்பிங் சென்டர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது இந்த மால்கள் திறக்கப்பட உள்ளன. அதேபோல கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் எந்த புதிய மால்களும் திறக்கப்படாத நிலையில் மால்களை கட்டுவதற்கான இடங்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்ரோ ரயில் நெட்வொர்க் மற்றும் புதிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் காரணமாக போக்குவரத்து இணைப்பு எளிதாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே புதிய மால்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

6.5 மில்லியன் சதுர அடியில் மால்கள்

இவ்வாறு கட்டப்படும் 7 மால்களில் நான்கு மால்கள் 6.5 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில் நான்கு பங்குதாரர்கள் ரூ.3,250 கோடி முதலீடு செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. மேற்குறிப்பிட்டதைப்போல இதில் லுலு மால் ஒன்றும் இருக்கிறது என்றாலும் அது எந்த இடத்தில் அமைகிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சென்னையில் அமைந்துள்ள மால்கள் குறைந்தப்பட்டசம் 1.5 லட்சம் சதுர அடியில் அமைந்திருக்கின்றன.

அதிகரித்துள்ள விற்பனை

இருப்பதில் பெரிய மாலான ஓஎம்ஆரில் அமைந்துள்ள மெரினா மால், 5.8 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாலில் விற்பனை கொரோனா தொற்றுக்கு முந்தையதை விட தற்போது 50% அதிகரித்துள்ளதாக மெரினா மாலின் விளம்பரதாரரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முக்ரிம் ஹபீப் கூறியுள்ளார். மேலும், “சுமார் ஒரு கோடி மக்கள்தொகை கொண்ட சென்னை பெருநகரப் பகுதியில் ஐந்தல்ல இருபது மால்களுக்கு கிராக்கி உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

புறநகர் பகுதிகளில் மால்கள்

அதேபோல, மாங்காடுவில் 2.5 லட்சம் சதுர அடியில் மால் கட்டவுள்ளதாக ARAM Realty இன் நிர்வாக இயக்குநர் முருகேசன் கூறியிருக்கிறார். இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும், 2025ல் இந்த மால் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னைக்கு கூடுதல் மால்கள் வரவுள்ள நிலையில், சில்லறை வர்த்தகங்கள் குறித்த நிலையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக சில்லறை வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An additional 7 malls are expected to open in Chennai by 2025. There are already 19 malls in Chennai city and suburbs. Due to this, the total number of malls will increase to 25. It has also been reported that these new malls are mostly located in the suburbs of Chennai. The news that the number of malls will increase in accordance with the ever-increasing population in Chennai is pleasing to the residents of Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/7-new-malls-are-going-to-be-opened-in-chennai-by-2025-474817.html