செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் – களைகட்டும் சென்னை – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இரண்டு இந்திய வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளை வரவேற்க சென்னை நகரம் தயாராகி வருகிறது.

இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இம்முறை மகளுருக்கென பிரத்யேகமாக நடைபெறுகிறது.

செப்டம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை பிரதான போட்டிகள் களைகட்டவுள்ளன. மகளிர் ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். 2017ம் ஆண்டிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளாக போட்டிகள் ஏதுமின்றி பராமரிப்பின்றி கிடந்த நுங்கம்பாக்கம் சர்வதேச டென்னிஸ் மைதானத்தை ஐந்து கோடி ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய இருக்கைகள், மின் விளக்குகள் பொருத்துதல் என 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து சர்வதேச வீரர்களை வரவேற்க மைதானம் தயாராகிவருகிறது.

டென்னிஸ் விளையாட்டு மீதான ஆர்வத்தை தூண்டுவதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டியை இலவசமாக காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 100 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் விளையாடும் 32 வீராங்கனைகளில் 22 பேர் நேரடியாக தரவரிசையின் அடிப்படையில் தகுதி பெற்றனர். நான்கு வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய அளவில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தாண்டி ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தகுதி சுற்று மூலம் ஆறு வீராங்கனைகள் பிரதான சுற்றில் விளையாடவுள்ளனர். இதற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக வீராங்கனைகளான சாய் சம்ஹிதா மற்றும் லட்சுமி பிரபா என இரண்டு பேர் தகுதி சுற்றில் பங்கேற்றனர். முதல் முறையாக இந்தியாவில் மகளிருக்கென டென்னிஸ் போட்டிகள் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளதாக இந்திய வீராங்கனைகள் கொண்டாடுகின்றனர்.

Read more:  ஆசியக்கோப்பை ஃபைனல் – இன்று மல்லுக்கட்டும் இலங்கை, பாகிஸ்தான்

இந்த தொடரின் தலைசிறந்த வீராங்கனையாக தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையும் விஜய் அமிர்தராஜின் மருமகளுமான அலிசன் அமிர்தராஜ் களமிறங்குகிறார். சென்னை ஓபன் தொடரில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு சர்வதேச அளவில் 250 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த தொடரில் விளையாடும் வீராங்கனைகளுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/sports/chennai-open-tennis-women-799998.html