சென்னை ஓபன் டென்னிஸ்: சர்வீஸில் தெறிக்கவிட்ட இந்திய வீராங்கனை கர்மான் கவுர்.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனிடையே,  தமிழத்தில் மீண்டும் ஆடவர் டென்னிஸ் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சென்னையில் WTA எனப்படும் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், தமிழக அரசும் இணைந்து, தமிழகத்தில் முதல் முறையாக நடத்தும் இத்தொடர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கி, ரஷ்யாவின் கிராசேவா, போலந்தின் மேக்டா லினட் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் களம் கண்டுள்ளனர்.

இத்தொடரின், ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 359-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, 111-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் வீராங்கனை சோல் ப்ராக்கெட் உடன் மோதினார். முதல் செட்டை 4-6 என கோட்டை விட்ட கர்மான் கவுர், இரண்டாவது செட்டை 6-4 என தனதாக்கினார்.

இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மூன்றாவது செட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் மத்தியின் ஏஸ் சர்வீஸ்களை தெறிக்க விட்ட தாண்டியா, பிரான்ஸ் வீராங்கனைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். குறிப்பாக, 143 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு, கடைசி செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.இரண்டாவது சுற்றில் பலம் வாய்ந்த கனட வீராங்கனையான யுஜேனி பவுச்சார்டு (Eugenie Bouchard) உடன், இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை: வலுவான இந்திய அணி அறிவிப்பு

இதனிடையே, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நேரில் பார்வையிட்ட தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் ஆடவருக்கான ATP டென்னிஸ் தொடர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழக அரசு, சென்னையை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என உறுதியளித்தார்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில், இரண்டாம் நாளான இன்று அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கி மற்றும் இந்தியாவின் அங்கிதா ரெய்னா உள்ளிட்டோர் முதல் சுற்றில் களம் காண்கின்றனர்…

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/sports/other-sports-wta-chennai-open-tennis-indian-player-karman-thandi-win-1st-round-800848.html