மகிழ்ச்சியில் சென்னை மெட்ரோ! ஒரே நாளில் இத்தனை பேர் பயணமா? இதுவரைக்கும் அப்படி நடந்ததே இல்லையாம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்து செல்வதற்காகவும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலுக்கு தொடக்கம் முதலே பொதுமக்கள் சிறப்பான ஆதரவை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ பணி.. மெரினாவில் உள்ள காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றம்.. இடத்தேர்வு பணி தீவிரம் சென்னையில் மெட்ரோ பணி.. மெரினாவில் உள்ள காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றம்.. இடத்தேர்வு பணி தீவிரம்

அதிகரிக்கும் பயணிகள்

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ அளித்து வருகிறது. இதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

மெட்ரோ ரயிலில் பயணம்

இந்த ஆண்டு, கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி 1,35,977 பேரும், பிப்ரவரியில் 1,43,252 பேரும், மாச்சில் 2,10,634 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,74,475 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பணித்துள்ளனர். இதேபோல், மே மாதத்தில் 1,91,720 பேரும், ஜூனில் 2,02,456 பேரும், ஜூலையில் 1,97,307 பேரும், ஆகஸ்டில் 2,20,089 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ஒரே நாளில் அதிகம் பேர் பயணம்

இதன் புதிய உச்சமாக கடந்த 12-ம் தேதி, ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமதாக 2,30,611 பேர், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில், அதிகபட்சமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 21,419 பேர் பயணம் செய்துள்ளனர். திருமங்கலம் ரயில் நிலையத்தில் 11,189 பேரும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 10,599 பேரும், விமான நிலையம் மெட்ரோ நிலையத்தில் 10,289 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் நன்றி

சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Metro Administration has informed that 2.30 lakh people have traveled in Chennai metro trains in single day.

Source: https://tamil.oneindia.com/news/chennai/2-30-lakh-people-travel-in-chennai-metro-trains-in-a-single-day-475613.html