சென்னை: பெண் தோழியைப் பழிவாங்க திட்டம்; குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, இளைஞர் தற்கொலை! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் கவிதா. இவருக்கு 9 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவுக்கும் அவரின் கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கவிதா, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்திருக்கிறர். அப்போது கவிதாவுக்கும் செங்குன்றம் அருகே உள்ள வட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு கவிதா வீட்டுக்கு ராஜேஷ் அடிக்கடி சென்று வந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் கவிதா, ராஜேஷ் ஆகியோரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதனால் கவிதாமீது ராஜேஷ் ஆத்திரமடைந்தார். கவிதாவை பழிவாங்க திட்டமிட்ட ராஜேஷ், அவரின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் கவிதா இல்லை. அவரின் இரண்டு மகன்கள் மட்டும் இருந்தனர். அதனால் அவர்களுக்கு விஷம் கலந்த உணவை ராஜேஷ் கொடுத்தார். பின்னர் அதே உணவை அவரும் சாப்பிட்டார். இதனால் மூன்று பேரும் மயங்கி விழுந்தனர். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கவிதா, மூன்று பேரும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மூன்று பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால், ராஜேஷ் உயிரிழந்துவிட்டார். குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ராஜேஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/youth-commits-suicide-by-intaking-poison-in-chennai