சென்னை காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடுவதா? – மார்க்சிஸ்ட் கண்டனம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி இணையத்தில் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதற்கான வழிகாட்டுதலையும் குறிப்பிட்டுள்ளது.

சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை தமிழ் மொழியில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு கருத்து கேட்கும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களிடம் கருத்து கேட்கும் வரைவு அறிக்கைகள் ஆங்கில மொழியில் மட்டும் வெளியிடப்படுவது தொடர் நடவடிக்கையாக அமைந்து வருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சென்னை மாநகராட்சியில் ஆங்கிலத்தில் மட்டும் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டதற்கான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடுவதற்கு காரணமானவர் மீது துறை வாரியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும்,சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை தமிழ் மொழியில் வெளியிட்ட பிறகு மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான உரிய கால அவகாசத்தை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/868360-chennai-climate-change-action-plan-report-should-be-published-in-tamil.html