சென்னை பருவநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை: மாநகரின் ஒரு பகுதி மூழ்கப் போகிறதா? தீர்வு என்ன? – BBC Tamil

சென்னைச் செய்திகள்
  • நந்தினி வெள்ளைச்சாமி & பிரசாந்த் முத்துராமன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

சென்னை மாநகராட்சி, பருவநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கடல் மட்ட உயர்வால் சென்னையில் ஒரு பகுதி மூழ்கும் என்றும், குடிசைப்பகுதிகள் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்புகளைக் கையாள்வதற்காக சி40 கூட்டமைப்பு, நகர்ப்புற மேலாண்மை மையம் (Urban Management Centre) ஆகியவற்றுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் செயல்திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளன.

என்ன சொல்கிறது அறிக்கை?

  • 67 சதுர கி.மீ. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி, அதாவது 16% பகுதி, 2100ம் ஆண்டில் வெள்ளத்தில் நிரந்தரமாக மூழ்கும்.
  • இதனால், சென்னையில் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
  • மேலும், மொத்தம் உள்ள குடிசைப் பகுதிகளில் 17% குடிசைப் பகுதிகளில் உள்ள (215 குடிசைப் பகுதிகள்) 2.6 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
  • 28 எம்.டி.சி பேருந்து நிலையங்கள், 4 புறநகர் ரயில் நிலையங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், இரண்டு அனல் மின்நிலையங்கள் ஆகிய கட்டுமானங்களும் 2100ம் ஆண்டுகளில் வெள்ளத்தில் மூழ்கும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரும் என்பதால், 100 மீட்டர் நீள கடற்கரை பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • நீர் பற்றாக்குறை காரணமாக, 53% வீடுகள் குடிநீருக்கான வெளிப்புற ஆதாரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
  • 2018ம் ஆண்டில் சென்னையில் 14.38 மில்லியன் டன் கார்பன் – டை – ஆக்சைடு வெளியிடப்பட்டுள்ளது, சராசரியாக தனிநபர் ஒருவர் 1.9 டன் கார்பன் – டை – ஆக்சைடை வெளியிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

செயல்திட்டம் என்ன?

2050ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் வகையில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள், போக்குவரத்து, நிலையான கழிவு மேலாண்மை, நகர்ப் புறங்களில் வெள்ளம் மற்றும் தண்ணீர் நெருக்கடியை சமாளித்தல், பாதிக்கப்படும் மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் ஆகிய 6 துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படுவதாக அடையாளம் காணப்படும் மக்களுக்கு காலநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் விதமான வீடுகளை கட்டமைத்தல், சுகாதார அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய இரு நோக்கங்களையும் இந்த செயல் திட்ட அறிக்கையில் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அதிகரிக்கும் வெப்பநிலை, நீர் பற்றாக்குறை, கடல்நீர் மட்டம் உயர்வு, வெள்ளம் மற்றும் புயல் ஆகிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.

என்ன சொல்கிறது அரசு?

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு

பட மூலாதாரம், Supriya sahu/Facebook

இந்த அறிக்கையின் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு, “தரவுகளின் அடைப்படையில் ஆராய்ந்து இந்த அறிவியல்பூர்வ அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாட்டின் 1076 கி.மீ கடற்கரையைக் கொண்டுள்ள 14 கடலோர மாவட்டங்களில் ஒரு ‘உயிரி தடுப்புச்சுவர்’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

“அதாவது, அலையாத்தியாக செயல்படக்கூடிய மாங்குரோவ் காடுகளை அதிகரிப்பதன் மூலம், மக்களின் பகுதிகளை கடல் நீர் ஊடுருவுவதிலிருந்து காப்பது இந்த திட்டத்தின் நோக்கம். அதிலும் குறிப்பாக அந்தந்த மாவட்டங்களின் மண்வளத்துக்கேற்ற தாவரங்களை ஆராய்ந்து அவற்றை வளர்ப்பதற்கு முன்னுரிமை தரப்படும். அலையாத்திக் காடுகள் அமைய வாய்ப்பில்லாத இடங்களில் பனைமரங்கள் அலையாத்திக்கு பதிலீடாகவும் பயன்படும். இதுதொடர்பான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

சென்னையை பாதுகாக்க முடியும்

“2100ஆம் ஆண்டுக்குள் சென்னை நகரத்தின் பெரும்பகுதி கடலால் சூழப்பட வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே, அதைக் கையாள இருக்கும் திட்டங்கள் என்ன?” என்று கேட்டபோது, இதைத் தடுப்பது என்பது உலகளாவிய கூட்டுப்பொறுப்பு. ஆனால், சென்னை நகரத்தை பாதுகாக்க நம்மால் முடியும்” என்று பதிலளித்தார்.

மேலும், “பனிப்பாறைகள் உருகுவதை சென்னை நகரத்தால் மட்டும் தடுக்க முடியாது. ஆனால், சென்னை மக்களுக்கு உருவாகவிருக்கும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள திட்டமிட முடியும். கடல் மட்டம் உயரும் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்த திட்ட அறிக்கை என்பது காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற செயல்திட்டம் தான்” என்று தெரிவித்தார்.

மற்றபடி கார்பன் சமநிலை, நீரின் முழுச்சுழற்சி ஆகியவற்றுக்கும் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூடுதலாக தெரிவித்தார்.

இந்த செயல் திட்ட அறிக்கை மீதான தங்கள் கருத்துகளை பொதுமக்கள் செப். 26 வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையிலேயே இது மக்களிடம் கருத்து கேட்கும் முறைமை அல்ல என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்

பட மூலாதாரம், Getty Images

அடுத்த 80 ஆண்டுகளுக்கு தீட்டப்படும் திட்டத்துக்கு, வெறும் 13 நாட்கள் கால அவகாசம் போதுமானதா? இதில் மக்களின் கருத்துக்கு கொடுக்கும் மரியாதையும் கொடுக்கப்படவில்லை. எப்படியும் வெளிநாட்டவர்களின் நிறுவனங்கள் மூலம்தான் இதைச் செய்கிறீர்கள். அவர்களிடமே கேளுங்கள்” என்கிறார் அவர்.

“வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட, சமூக பொருளாதாரத்தோடு தொடர்புடைய பிரச்னையான காலநிலை மாற்றத்தை வெறும் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளுடன் அணுகுகிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கையில் இருக்கும் புள்ளிவிவரங்கள் மிகவும் உதவிகரமானவையாக இருக்கின்றன. ஆனால், ஒருபுறம் வளர்ச்சி என்ற பெயரில் கட்டுமானங்களை உருவாக்கிக்கொண்டே சுற்றுச்சூழலை பாதுகாப்பது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்” என்கிறார்.

சமூக கண்ணோட்டம் இல்லை

வாகனங்களை மின்வாகனங்களாக மாற்றுவது, மறுசுழற்சி முறையில் நீரை பயன்படுத்துவது அதற்கான முறையை உருவாக்குவது, பசுமை இல்ல வாயுக்கள் தொடர்பான தரவுத்தளத்தை உருவாக்குவது என தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளே வழங்கப்பட்டுள்ளன. பொருளாதார, சமூக சமத்துவ அரசியல் கண்ணோட்டத்தில் இந்த தீர்வுகள் இல்லை.

இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் இல்லை. மக்களை உள்ளடக்கிய தீர்வும் இல்லை. பிரச்னைகளையும் அந்த அறிக்கையே சொல்லி தீர்வுகள் என்றும் சில தொழில்நுட்ப மாறுதல்களை இந்த அறிக்கையே முன்வைக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிடும் சென்னை மாநகராட்சி ‘நீண்ட கால குடியிருப்பு’ (long term housing) திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். கடற்கரை மேலாண்மை அறிவிப்பாணை 2011, 2019இல் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டபூர்வ உரிமை இந்த நீண்டகால குடியிருப்பு திட்டம். அதை முழுமையாக இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த நிலையில், எண்ணூர் ஆற்றை அடைத்துக்கொண்டே காலநிலை மாற்றமும் பேசக்கூடாது. மீனவ கிராமங்களை ஒடுக்கிக்கொண்டே கடல் மட்ட உயர்வு மேலாண்மையும் பேசக்கூடாது”என்றும் தெரிவித்தார்.

“ஐ.நாவிலும், வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறதே தவிர, மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் இதில் இல்லை” என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/india-62918705